‘மா. இளங்கண்ணனின் சிறுகதைகளும் சிங்கைத் தமிழர்களும்’ நூல் வெளியீடு

2 mins read
cf1ae1ce-e896-4425-b411-4dadb8641934
‘மா.இளங்கண்ணனின் சிறுகதைகளும் சிங்கைத் தமிழர்களும்’ என்னும் நூல் வெளியீடு காணவிருக்கிறது. - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் முனைவர் ரவீந்திரநாத் செல்வராணியின் முனைவர் பட்ட ஆய்வின் தொடர்ச்சியாக, இக்காலத் தலைமுறையினருக்குச் சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதை வரலாற்றையும் அதன் சிறப்பையும் உணர்த்தும் வகையில் புத்தகமாக வெளிவருகிறது ‘மா.இளங்கண்ணனின் சிறுகதைகளும் சிங்கைத் தமிழர்களும்’ என்னும் நூல்.

சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதை வரலாறு, மா.இளங்கண்ணனின் வாழ்க்கை வரலாறு, சிங்கையில் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் இளங்கண்ணனின் சிறுகதைகளில் வெளிப்படும் வாழ்வியல் விழுமியங்கள் போன்றவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

நூலின் வெளியீட்டு விழா, கழகத்தின் தலைவர் திரு சு.முத்துமாணிக்கம் தலைமையில், வரும் நவம்பர் 2ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. 100 விக்டோரியா சாலையிலுள்ள தேசிய நூலகத்தின் தி போட், 16ஆவது தளத்தில் நிகழ்ச்சி நடைபெறும்.

முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினரும் எழுத்தாளர்க் கழகத்தின் மதியுரைஞருமான திரு இரா. தினகரன், விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிடுவார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் முனைவர் ஞா. ஸ்டீபன் நூலின் சிறப்புகளை அறிமுகம் செய்யவிருக்கிறார்.

சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சார்புநிலைப் பேராசிரியரும் எழுத்தாளர் கழகத்தின் மதியுரைஞருமான பேராசிரியர், முனைவர் சுப. திண்ணப்பன், எழுத்தாளர் திரு பொன். சுந்தரராசு இருவரும் வாழ்த்துரை ஆற்றுவர்.

சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு மணிவிழாவை முன்னிட்டு, சிங்கப்பூர்ச் சிறுகதை வரலாறு பற்றிய இத்தகைய நூல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவருவது இதுவே முதல் முறை.

மாலை 6.00 மணிக்குச் சிற்றுண்டியுடன் தொடங்கும் விழாவிற்கு வருகை தந்து இந்த அரிய நூலை வாங்கிப் பயனடையும்படி அனைவரையும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் கேட்டுக்கொள்கிறது.

குறிப்புச் சொற்கள்