மூளையின் இரவு நேரப் பணி: உறக்கமின்மை ஆபத்துகள் குறித்த ஆராய்ச்சி

மூளையின் இரவு நேரப் பணி: உறக்கமின்மை ஆபத்துகள் குறித்த ஆராய்ச்சி

3 mins read
7af9a52d-c587-481f-addc-e360b16a799c
உறக்கம் என்பது ஒரு மனிதனின் சிந்தனை, உணர்வு, மூப்படையும் விதம் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் அன்றாட வாழ்க்கை நடைமுறையாகும். - படம்: ஐஸ்டாக்
Google News Preferred Icon

ஆண்டுதோறும் மார்ச் 15ஆம் தேதி உலக உறக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.

‘நன்றாக உறங்குங்கள், சிறப்பாக வாழுங்கள்’ என்ற புதிய கருப்பொருளுடன், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றுக்கு இணையாக உறக்கத்தையும் முக்கியமானதாகக் கருத வேண்டும் என்பதை இவ்வாண்டுக்கான விழிப்புணர்வுப் பிரசாரம் வலியுறுத்துகிறது.

உறக்கம் என்பது ஒரு மனிதனின் சிந்தனை, உணர்வு, மூப்படையும் தன்மை ஆகியவற்றைத் தீர்மானிக்கும் அன்றாட வாழ்க்கை நடைமுறையாகும்.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட உலக உறக்கச் சங்கம் எனும் லாப நோக்கமற்ற அமைப்பால் 2008ஆம் ஆண்டுமுதல் உறக்கத்தை வலியுறுத்தும் அப்பிரசாரம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

உறக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள்

தூய்மையான நீர் அல்லது பாதுகாப்பான உணவிற்குச் சமூகங்கள் திட்டமிடுவதைப் போலவே, மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த மக்கள் வழக்கமான, தரமான உறக்கத்தைத் திட்டமிட வேண்டும் என்று உறக்க நிபுணர்களும் ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

உறக்கம் என்பது வெறும் ஓய்வு, நினைவாற்றலை உறுதிப்படுத்தும் செயல் மட்டுமன்று; கிளிம்பேடிக் (glymphatic) என அழைக்கப்படும் மூளையில் உள்ள நச்சுகளையும் தேவையற்ற புரதங்களையும் அகற்றும் ஒரு தனித்துவமான அமைப்பு தீவிரமாகச் செயல்படும் நேரமுமாகும்.

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சுத்திகரிப்பு அமைப்பில் உறக்கமின்மை காரணமாக ஏதேனும் பாதிப்பு நேர்ந்தால், அது மூளை தொடர்புடைய நோய்கள், பக்கவாதம், பிற நரம்பு தொடர்புடைய நோய்கள் ஆகியவை ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியப் பல்கலைக்கழக ஆய்வு

2025ஆம் ஆண்டு டிசம்பரில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகம் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.

அதில், பேராசிரியர் நடாலி டிரெவாஸ்கிஸ் தலைமையிலான ஆய்வாளர்கள் குழுவும் அமெரிக்காவின் யேல் மருத்துவப் பள்ளியும் இணைந்து மூளையின் சுத்திகரிப்பு அமைப்பை மேம்படுத்த ஊடுருவல் இல்லாத ஒரு புதிய சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.

அதன் மூலம் இஸ்கிமிக் பக்கவாதம் (Ischaemic stroke), பிற நரம்பியல் நோய்களிலிருந்து நோயாளிகள் குணமடைவதை விரைவுபடுத்த முடியும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கழுத்தின் மேல்பகுதியில் மென்மையான, வெளிப்புறத் தூண்டுதலை ஏற்படுத்தி, பக்கவாதத்திற்குப் பிறகு மூளையிலிருந்து கழிவை வெளியேற்ற உதவும் நிணநீர் வடிகால் பாதைகளை அந்தப் புதிய சிகிச்சை முறை சீராக்குகிறது.

இன்னும் ஆராய்ச்சி நிலையில் உள்ளதால், இது ஒரு உடனடித் தீர்வன்று. ஆனால், வரும் காலங்களில் பக்கவாத சிகிச்சையில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்.

சிங்கப்பூரின் முன்னெடுப்புகள்

சிங்கப்பூரில், மூளையின் இரவு நேர சுத்திகரிப்பு அமைப்பில் உள்ள அடைப்புகளை நீக்கி, மறதி நோய் போன்ற நோய்களின் வேகத்தைக் குறைக்க முடியுமா என்பதை ஒரு நுட்பமான கழுத்து அறுவை சிகிச்சை மூலம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் தற்போது சோதித்து வருகின்றனர்.

தேசிய நரம்பியல் கழகத்தில், நரம்பியல் அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் சென் மின் வெய் கூறுகையில், மூளையில் உள்ள கழிவுகளைச் சுத்திகரிக்கும் அமைப்புச் சார்ந்த ஒரு மருத்துவப் பரிசோதனையை நடத்தி வருவதாகவும் பிற பொது மருத்துவமனைகளும் அதற்கு உதவி வருவதாகவும் கூறினார்.

மேலும், “இந்த ஆராய்ச்சி, முக்கியமாக ஆசியாவில் மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாகும். மறதி நோய், நரம்பியல் சிதைவு போன்ற நோய்களில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த, அறுவை சிகிச்சையை ஒரு வழியாகப் பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும்,” என்றார் டாக்டர் சென்.

இதுவரை கிடைத்துள்ள ஆரம்பக்கட்ட முடிவுகள் நம்பிக்கையளித்தாலும், அதன் நீண்ட கால முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
தூக்கம்மூளைஉடல்நலம்