வரவுசெலவுத் திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட ‘பெரிய குடும்பங்களுக்கான ஆதரவுத் திட்டம்’, மகேஷ்வரன்-எலிசபெத் தம்பதியருக்கு உற்சாகமூட்டும் ஒன்றாக அமைந்துள்ளது.
இவர்களின் முதல் குழந்தைக்கு வயது எட்டு. மொத்தம் நான்கு பிள்ளைகள் இவர்களுக்கு உள்ளனர். நான்காவது ஆண் குழந்தை பிறந்து ஏழு மாதங்களே ஆகின்றன. இந்த வரவு செலவுத் திட்டத்தால் பெரிய குடும்பம் என்ற நிலையில் தாங்கள் மிகுந்த மகிழ்ச்சி கொள்வதாக 33 வயது எலிசபெத் தவராஜ், 36 வயது மகேஷ்வரன் மெர்வின் இருவரும் தெரிவித்தனர்.
அரசாங்கம் அறிவித்துள்ள ‘லைஃப் எஸ்ஜி’ ஆதரவுத் திட்டங்களின் வாயிலாக இக்குடும்பத்தினர் இனி $11,000 மதிப்புள்ள அனுகூலங்களைப் பெறவுள்ளனர். திருமணம், மற்றும் பிள்ளை வளர்ப்பில் கைகொடுப்பது தேசத்தின் முன்னுரிமை என்று பிரதமர் வோங் தமது உரையில் குறிப்பிட்டார்.
இது குறித்து கருத்துரைத்த திருவாட்டி எலிசபெத், குழந்தை போனஸ் திட்டம் மூலம் அவர்கள் தற்போது 18 மாதம் வரை $1000 பெற்று வருவதாக தெரிவித்தார்.
“ஆயினும் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தால் இனி எங்கள் பிள்ளைகள் ஆறு வயது அடையும் வரை போனஸ் தொகையை பெறவிருப்பதால் பிள்ளை வளர்ப்பில் கிடைக்கவுள்ள நிதியுதவி எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார் எலிசபெத்.
இந்த மானியங்களும் உதவிகளும் நடுத்தர வருமானத்தைக் கொண்டிருக்கும் பெரிய குடும்பங்களுக்குப் பேருதவியாக திகழும் என்று நம்பிக்கை தெரிவித்தார் அவர்.
மானியங்கள் வழியாக கிடைக்கவுள்ள இந்த நிதி ஆதரவைப் பிள்ளைகளுக்கான இணைப்பாட வகுப்புகள், பள்ளிக்கான பேருந்துக் கட்டணம் உள்ளிட்ட வாழ்க்கைச் செலவினங்களைச் சீராக நிர்வகிக்கச் செலவிடப்போகிறோம் என்றும் அவர் கூறினார்.

