பிரிட்டனைச் சேர்ந்த இணையப் பாதுகாப்பு நிறுவனமான கோல்டிலாக், சிங்கப்பூரில் ஜூலை மாதம் அதன் அலுவலகத்தைத் திறக்கவிருக்கிறது.
அதன் தொடர்பில் $1.2 மில்லியனை முதலீடு செய்யும் அந்நிறுவனம், அடுத்த சில ஆண்டுகளில் பொறியாளர்கள் 20 பேரைப் பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளது.
கோல்டிலாக் நிறுவனத்தின் சிங்கப்பூர் அலுவலகத்தில், முதல் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பொறியாளர்கள் ஐவர் மட்டுமே பணியாற்றுவர். உதவியாளர்கள் சிலரும் பணியமர்த்தப்படுவர் என்று நிறுவனம் கூறியது.
மற்ற துறைகள் சார்ந்த பொறியாளர்களுக்கு மறுதிறன் பயிற்சி அளிக்கவும் அது திட்டமிடுகிறது.
பிரிட்டனின் புத்தாக்க அமைப்பான ‘இன்னொவேட் யூகே’, ‘என்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ ஆகியவற்றின் பிரிட்டன் - சிங்கப்பூர் ஒத்துழைப்பு ஆய்வு, மேம்பாட்டு நிதியிலிருந்து கூடுதலாக 800,000 வெள்ளியை கோல்டிலாக் நிறுவனம் பெற்றுள்ளது.
பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளை அடுத்து மூன்றாவதாகச் சிங்கப்பூரில் அலுவலகத்தைத் திறக்கிறது கோல்டிலாக் நிறுவனம்.
ஆசிய-பசிபிக் வட்டாரத் தலைமையகமாகவும் செயல்படவிருக்கும் அந்த அலுவலகம் உபி வட்டாரத்தில் அமையவிருக்கிறது.

