தைப்பூசத்தில் அசத்திய சகோதரர்கள்!

தைப்பூசத்தில் அசத்திய சகோதரர்கள்!

1 mins read
3704261a-7848-4184-9662-17233bc6cb5c
காவடி ஏந்திச் செல்லும் சகோதரர்களான அண்ணன் ஷவினேஷ் ராஜ், தம்பி லக்னேஷ் ராஜ். - படம்: தாட்சாயணி சுரேந்தர்

தைப்பூசத் திருவிழா என்றாலே பக்திப் பாடல்களும் ஆட்டமும் வண்ணமயமான காவடிகளும்தான் நம் நினைவுக்கு வரும். இந்த ஆண்டு தைப்பூசத்தில் இரண்டு சகோதரர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

உட்லண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 12 வயது மாணவர் ஷவினேஷ் ராஜ், உட்குரோவ் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 8 வயது மாணவர் லக்னேஷ் ராஜ் ஆகிய இருவரும் காவடி எடுத்துத் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

இதுபற்றி அண்ணன் ஷவினேஷ் ராஜ் கூறும்போது, “எனக்கு 10 வயதாக இருந்தபோது முதன்முதலில் காவடி எடுத்தேன். அந்த அனுபவம் இப்போதும் பசுமையாக உள்ளது. நம் கலாசாரத்தைப் பின்பற்றுவது எனக்குப் பெருமையாக இருக்கிறது,” என்றார் மகிழ்ச்சியுடன்.

தம்பி லக்னேஷ் ராஜ், “என் அண்ணனைப் பார்த்து எனக்கும் காவடி எடுக்க ஆர்வம் வந்தது. இதற்காகப் பள்ளி உணவகத்தில்கூட அசைவ உணவுகளைத் தவிர்த்து, நான் மிகக் கடுமையாக விரதம் இருந்தேன்,” என்று உற்சாகமாகக் கூறினார்.

இவர்களின் தாயார் திருமதி சிவரஞ்சினி, “என் பிள்ளைகள் சிறு வயதிலேயே நம் பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்று பெருமிதத்துடன் கூறினார்.

இறைபக்தியும் கலாசாரமும் மாணவர்களுக்கு மனவலிமையைக் கொடுக்கும் என்பதற்கு இந்தச் சகோதரர்களே சிறந்த உதாரணம்!

குறிப்புச் சொற்கள்