தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளுக்கு (பிடிஓ) விண்ணப்பம் செய்யும் தம்பதிகளின் வருமான உச்சவரம்பும் வீடுகளை வாங்குவதற்கான தனிநபர் குறைந்தது 35 வயதாக இருக்க வேண்டும் என்ற வரம்பும் மறுஆய்வு செய்யப்படுகின்றன.
அத்தகைய கொள்கைகளில் ஒருவேளை மாற்றங்கள் செய்யப்பட்டால் அது எதிர்வரும் வீட்டு விநியோகம், தேவை ஆகியவற்றை பொறுத்து அமையும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார்.
வீடுகள் வாங்குவோருக்கான தகுதி நிபந்தனைகளில் மாற்றங்கள் செய்யப்பட பிடிஓ வீடுகளின் விநியோகம் தொடர்ந்து உறுதியான முறையில் இருக்க வேண்டும் என்றார்.
“தம்பதிகளுக்கான வருமான வரம்பும் தனியாருக்கான வயது வரம்பும் மறுஆய்வு செய்யப்படுகிறது என்று சிங்கப்பூரர்களுக்கு உறுதி கூறுகிறோம். உரிய வேளையில் சில மாற்றங்களைச் செய்ய திட்டமிடுகிறோம்,” என்று திரு சீ கூறினார்.
ஆனால் அத்தகைய மாற்றங்களைச் செய்யும்போது போதுமான வீடுகள் இல்லாத நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை உறுதி செய்துகொள்ள விரும்புகிறோம் என்ற திரு சீ, கொவிட்-19 நோய்ப்பரவலால் ஏற்பட்ட பிடிஓ வீடுகளின் பற்றாக்குறையைச் சரிசெய்ய அரசாங்கம் கடுமையாக உழைத்திருப்பதைக் குறிப்பிட்டார்.
அப்போது பலரால் வீடுகளைத் தேர்வு செய்ய முடியாமல் போனதோடு புதிய வீடுகளுக்காகப் பலர் நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகினர்.
புதிய வீடுகளுக்கான தேவை தொடர்ந்து வலுவாக இருக்கிறது என்ற திரு சீ, இளம் தம்பதிகள் பெற்றோருக்கு அருகில் சொந்த வீடுகளில் வாழ விரும்புகின்றனர் என்றார்.
அடுத்த சில ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படும் வீடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே தம்பதிகளுக்கான வருமான வரம்பும் தனியாருக்கான வயது வரம்பும் மாற்றியமைக்கப்படும் என்று திரு சீ வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
“தனியாரின் வயது வரம்பைக் குறைத்தாலோ, தம்பதிகளின் வருமான வரம்பைக் கூட்டினாலோ அதிகமானோர் வீடுகளை வாங்க தகுதிபெறுவர். அதைத் தொடர்ந்து வீடுகளுக்கான தேவையும் அதிகரிக்கும்,” என்ற திரு சீ, அந்தத் தேவையை விற்பனைக்குத் தயார்நிலையில் அதிக வீடுகள் இல்லாமல் பூர்த்திசெய்ய முடியாது என்றார்.
கொள்கை மாற்றங்கள் செய்ய சரியான சூழலை உருவாக்குவது மிகவும் முக்கியம் என்று திரு சீ குறிப்பிட்டார்.