தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
புதிய வீடுகள் 2026 பிப்ரவரியில் விற்பனைக்கு வருகின்றன

தெம்பனிஸ் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகிலும் செம்பவாங் நார்த்திலும் புதிய பிடிஓ திட்டங்கள்

3 mins read
8dba8dfe-d1ce-479c-be3d-f2da0959cabe
தெம்பனிசில் வரவிருக்கும் குடியிருப்புத் திட்டங்களில் ஒன்று தெம்பனிஸ் அவென்யூ 2க்கும் தெம்பனிஸ் ஸ்திரீட் 22க்கும் இடையில் அமைந்திருக்கும். அதில் 280 வீடுகள் இருக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெம்பனிஸ் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே, தேவைக்கேற்பக் கட்டப்படும் (பிடிஓ) 250 வீடுகள் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கின்றன. புதிய செம்பவாங் நார்த் அக்கம்பக்கக் குடியிருப்புப் பேட்டையிலும் அத்தகைய இரண்டு வீட்டுத் திட்டங்கள் விற்பனைக்கு வருகின்றன.

அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரியில் விற்பனைக்கு வரும் ஆறு பிடிஓ திட்டங்களில் அவையும் அடங்கும்.

புக்கிட் மேராவிலும் தோ பாயோவிலும் பள்ளிகளுக்கு அருகே பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்படும். ஒவ்வொரு வட்டாரத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வருகின்றன.

புக்கிட் மேரா, செம்பவாங், தெம்பனிஸ், தோ பாயோ ஆகிய வட்டாரங்களில் பிப்ரவரி மாதம் வரவிருக்கும் 4,600 வீடுகளின் விவரங்களை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அதன் இணையத்தளத்தில் புதன்கிழமை (அக்டோபர் 15) வெளியிட்டது.

முந்தைய பிடிஓ திட்டங்களில் விற்பனையாகாமல் எஞ்சியிருக்கும் 3,000 வீடுகளின் விவரங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

தெம்பனிசில் இரண்டு திட்டங்களில் மொத்தம் 530 வீடுகள் உள்ளன.

அவற்றில் ஒன்று தெம்பனிஸ் சென்ட்ரல் 8ல் இருக்கிறது. அங்கிருந்து நடந்துசென்றால் தெம்பனிஸ் எம்ஆர்டி நிலையத்தையும் ‘நமது தெம்பனிஸ்’ நடுவத்தையும் ஐந்து நிமிடத்தில் அடைந்துவிடலாம்.

இத்திட்டத்தின்கீழ், ஏறக்குறைய 250 ஈரறை, நாலறை வீடுகளும் பாலர் பள்ளியொன்றும் இருக்கும்.

தெம்பனிசில் வரவிருக்கும் மற்றொரு திட்டத்தில் 280 மூவறை, நாலறை வீடுகள் இருக்கும். அவை தெம்பனிஸ் அவென்யூ 2க்கும் தெம்பனிஸ் ஸ்திரீட் 22க்கும் இடையில் அமைந்திருக்கும். தெம்பனிஸ், சீமெய் எம்ஆர்டி நிலையங்கள் அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. சொங்சங், யீமின் தொடக்கப் பள்ளிகளும் அருகில் இருக்கின்றன.

புதிய செம்பவாங் நார்த் குடியிருப்புப் பேட்டையில் இரண்டு பிடிஓ திட்டங்கள் வரவிருக்கின்றன. அவற்றில் மொத்தம் 1,920 வீடுகள் கட்டப்படும். அவற்றுக்குப் பக்கத்தில் அட்மிரால்டி லேனில் ஒரு பூங்காவை நிறுவவும் திட்டமுள்ளது.

இரண்டு திட்டங்களில் ஒன்று பெரியது. செம்பவாங் டிரைவில் அமையவிருக்கும் அதில் 1,160 ஈரறை ஃபிளெக்ஸி, நாலறை, ஐந்தறை வீடுகள் இருக்கும்.

மற்றொரு திட்டம் 760 ஈரறை ஃபிளெக்ஸி, மூவறை, நாலறை, ஐந்தறை வீடுகளைக் கொண்டிருக்கும். பாலர் பள்ளி, உணவகம், சிற்றங்காடி, கடைகள் முதலியவையும் அதில் இருக்கும்.

கேன்பரா தொடக்கப் பள்ளியும் உயர்நிலைப் பள்ளியும் அருகில் உள்ளன. செம்பவாங் எம்ஆர்டி நிலையம் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

புக்கிட் மேராவில் உருவாகவிருக்கும் திட்டத்தில் 1,040 ஈரறை ஃபிளெக்ஸி, மூவறை, நாலறை வீடுகள் இருக்கும். ஜாலான் புக்கிட் மேரா, ரெட்ஹில் குளோஸ் வட்டாரத்தில் வரவிருக்கும் அந்த வீடுகளிலிருந்து ஏறக்குறைய ஐந்து நிமிடம் நடந்துசென்றால் ரெட்ஹில் எம்ஆர்டி நிலையத்தை அடையலாம்.

கான் எங் செங் தொடக்கப் பள்ளி, புக்கிட் மேரா உயர்நிலைப் பள்ளி முதலியவை அருகில் உள்ளன.

தோ பாயோவில் 1,130 ஈரறை ஃபிளெக்ஸி, மூவறை, நாலறை வீடுகள் மத்திய விரைவுச்சாலைக்கு அருகில் கிம் கியெட் அவென்யூவில் கட்டப்படும். புதிய திட்டத்தில் பாலர் பள்ளி, உணவகம், சிற்றங்காடி, கடைகள் முதலியவை இருக்கும். திட்டத்தின் கட்டுமானத்தளம், தோ பாயோ எம்ஆர்டி நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்