கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால் சில விருப்பத்திற்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டுத் திட்டங்களைக் கட்டி முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களில் இன்னும் வீட்டுச் சாவியைப் பெறாதோருக்கு இம்மாத இறுதிக்குள் அவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பிடிஓ திட்டங்களைக் கட்டிமுடித்து அவற்றை வீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பல்லாண்டு முயற்சி நிறைவுக்கு வரவுள்ளது.
கொள்ளைநோய்ப் பரவலால் தாமதமடைந்த கடைசி இரண்டு பிடிஓ திட்டங்கள், ‘பொங்கோல் பாயின்ட் கோவ் (இரண்டாம் கட்டம்)’, ‘கெம்பாஸ் ரெசிடன்சஸ்’ ஆகியவையாகும். அவற்றில் வீடு வாங்கிய அனைத்து 1,651 பேரும் வீட்டுச் சாவியைப் பெற பதிவுசெய்திருப்பதாக வீவக சனிக்கிழமை (மார்ச் 8) தெரிவித்தது.
அவ்விரு திட்டங்களும் கடந்த ஜனவரி மாதம் கட்டி முடிக்கப்பட்டன. கடந்த ஐந்தாண்டுகளாக பிடிஓ திட்டங்களில் ஏற்பட்டுவந்த தாமதம் ஒரு முடிவுக்கு வருகிறது.
92க்கும் மேலான வீடமைப்புத் திட்டங்களில் வீடு வாங்கிய மொத்தம் 72,101 குடும்பங்கள் கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால் பாதிக்கப்பட்டன. ஊரடங்கு, பாதுகாப்பான தூர இடைவெளி விதிமுறைகள், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகள் போன்ற காரணங்களினால் சம்பந்தப்பட்ட பிடிஓ திட்டங்களில் தாமதம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட 27 திட்டங்கள், ஒன்றிலிருந்து ஆறு மாதங்கள் தாமதமடைந்தன. 62 திட்டங்களைக் கட்டி முடிப்பதில் ஏழிலிருந்து 12 மாதங்கள் தாமதம் ஏற்பட்டது. ஒரு திட்டம், சரியான நேரத்தில் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் கட்டி முடிக்கப்பட்டது.
‘வாட்டர்வே சன்ரைஸ் 2’, ‘ஏங்கர்வேல் வில்லேஜ்’ எனும் இரு திட்டங்கள், வீவக வீடுகளை உரிமையாளர்களிடம் சட்டபூர்வமாக ஒப்படைக்கவேண்டிய தேதிக்குப் பிறகு கட்டி முடிக்கப்பட்டன. இவ்வாறு நிகழ்ந்தது இதுவே முதல்முறை.
கொவிட்-19 (தற்காலிக நடைமுறைகள்) சட்டத்தின்கீழ், அவ்விரு திட்டங்களிலும் வீடு வாங்கிய 1,000க்கும் மேற்பட்டோரிடம் இழப்பீடாக மொத்தம் 5.5 மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டதாக வீவக சனிக்கிழமையன்று தெரிவித்தது.

