தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இன்னொரு பட்டயம் பெற $4,000 பயிற்சி உதவி நிதி, மானியம்

2 mins read
6560cf7e-e0d5-49f6-b5e6-6323e73f983c
மனித மூலதனத்தில் அரசாங்கம் அதிக முதலீடு செய்து வருவதாகக் குறிப்பிட்ட துணைப் பிரதமர், பள்ளிக்காலம் முடிந்ததும் கற்றலை நிறுத்திவிடக்கூடாது என்று வலியுறுத்தி இருக்கிறார். - படம்: சாவ்பாவ்

தங்களது தேர்ச்சிகளை மேம்படுத்தி, வாழ்க்கைத்தொழிலில் மேம்பட ஏதுவாக 40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களுக்கு இவ்வாண்டு மே மாதம் $4,000 ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவி நிதி வழங்கப்படும்

அவர்கள் பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஐடிஇ), கலைக் கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் இன்னொரு முழுநேர பட்டயப் படிப்பில் சேரவும் 2025ஆம் ஆண்டு முதல் மானியங்கள் வழங்கப்படும்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தபோது துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் இதனைத் தெரிவித்தார்.

புதிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், மேம்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்கும் குறிப்பிட்ட பயிற்சித் திட்டங்களுக்கே 4,000 வெள்ளி பயிற்சி உதவி நிதி வழங்கப்படும்.

பகுதிநேர மற்றும் முழுநேரப் பட்டயப் படிப்பு, பட்டயக் கல்விக்குப் பிந்திய கல்விச் சான்றிதழ், பட்டக் கல்வி உள்ளிட்டவை அதில் அடங்கும்.

இளம் சிங்கப்பூரர்கள் 40 வயதை எட்டியதும் அவர்களுக்கும் இந்தப் பயிற்சி உதவி நிதி கிடைக்கும். இந்த 4,000 வெள்ளி பயிற்சி உதவி நிதிக்குக் காலாவதித் தேதி கிடையாது.

நாற்பது வயதிற்கு மேற்பட்டோர் முழுநேரப் படிப்பில் சேரும்போது வேலையிலிருந்து விடுப்பு எடுக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு வருமான இழப்பு ஏற்படலாம்.

அதனை ஈடுகட்டும் வகையில், அடுத்த ஆண்டு முழுநேரப் படிப்பில் சேரும் அவ்வயதுப் பிரிவு ஊழியர்களுக்கு மாதாந்தரப் பயிற்சிப் படி வழங்கப்படும்.

அந்தப் படித்தொகையானது, அவர்கள் கடைசி 12 மாதங்களில் ஈட்டிய வருமானத்தின் சராசரியில் 50 விழுக்காடாக இருக்கும். அதிகபட்சம் 3,000 வெள்ளி வரை படித்தொகை வழங்கப்படும்.

அதிகபட்சமாக ஒருவரின் வாழ்நாளில் 24 மாத காலத்திற்குப் பயிற்சிப் படி வழங்கப்படும். ஒருவர் ஓராண்டு காலத்திற்கும் மேலாக வேலையின்றி இருந்தால், அவருக்குப் பயிற்சிப் படி வழங்கப்படாது.

மனித மூலதனத்தில் அரசாங்கம் அதிகமாக முதலீடு செய்து வருவதாகக் குறிப்பிட்டார் நிதியமைச்சருமான திரு வோங். ஆயினும், பள்ளிக்காலம் முடிந்ததும் கற்றலை நிறுத்திவிடக்கூடாது என்றும் அவர் சொன்னார்.

தேர்ச்சி, தொழில்நுட்பத் திறன் அடிப்டையில் சிங்கப்பூர் ஊழியரணி உயர்ந்த நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்ட துணைப் பிரதமர், விரைந்த தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நிபுணத்துவ மேம்பாடு தொடர வேண்டும் என்றும் சொன்னார்.

ஊழியர்கள் தங்களது தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொள்ளவும் புதிய தொழில்நுட்பங்களைத் திறம்பட பயன்படுத்துவது குறித்து அறிந்துகொள்ளவும் அதிக முதலீடு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“எப்போதும் இல்லாத வகையில், வாழ்க்கை முழுதும் தொடர்ந்து திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது இப்போது மிகவும் முக்கியமாகி இருக்கிறது,” என்றார் திரு வோங்.

தாங்கள் விரும்பாதபோதும் வேலையின்றி இருக்கும் ஊழியர்களுக்கு அதிக உதவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்காலிக நிதியாதவுத் திட்டத்தின்மூலம், பயிற்சிக்குச் செல்ல அல்லது தங்களது தகுதிக்கேற்ற வேலை தேட அவர்களுக்கு ஆதரவு வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்