தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்களுக்கான ஆதரவுத் திட்டங்கள் தொடரும்: முரளி

3 mins read
bdcd90a4-77f5-4332-a9fd-c8fe6fdc0529
தமிழர் பேரவையும் இந்திய முஸ்லிம் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சட்ட, போக்குவரத்துத் துணையமைச்சர் முரளி பிள்ளையும் (வலது) பொருளியல் வல்லுநர் சீனி ஜாஃபர் கனியும் கலந்துகொண்டனர். - படம்: யோகிதா அன்புச்செழியன்

தமிழர் பேரவையும் இந்திய முஸ்லிம் பேரவையும் இணைந்து சனிக்கிழமை (மார்ச் 1) ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சிங்கப்பூர் இந்திய சமூகத்தினர் நாட்டின் இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

சிண்டா உள்ளரங்கில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் சட்ட, போக்குவரத்துத் துணையமைச்சரும் தமிழர் பேரவையின் ஆலோசகருமான முரளி பிள்ளையும் பொருளியல் வல்லுநரும் பிஸ்னஸ் சினர்ஜி ஆசியாவின் இயக்குநரும் இந்திய முஸ்லிம் பேரவை ஆலோசகருமான சீனி ஜாஃபர் கனியும் சிறப்புப் பேச்சாளர்களாக அழைக்‌கப்பட்டிருந்தனர்.

சிங்கப்பூரின் வெவ்வேறு இந்திய அமைப்புகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.

உலகம் பரஸ்பர நலன் சார்ந்த உறவுகளைக் கூடுதலாகக் கொண்டுள்ள நிலையில், சிங்கப்பூர் தொடர்ந்து மீள்திறனைக் கடைப்பிடிக்‌க வேண்டும் என்று திரு முரளி தமது தொடக்‌க உரையில் கூறினார்.

வளமான நாடுகளுடன் ஒப்பிடுகையில், திட்டமிட்ட செலவினத்தின் மூலம் சிங்கப்பூர் தனது இருப்புநிதியை வளர்த்துள்ளதாகக் கூறிய அவர், கொவிட்-19 தொற்றுநோய்க் காலகட்டத்தில் 40 பில்லியன் வெள்ளி செலவிட்டபோதும் நாடு கடன் பெறவில்லை என்று குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் மக்களைப் பாதிக்கும் செலவினக் கவலைகளை ஒப்புகொண்ட துணையமைச்சர், அதேநேரத்தில், பொருள், சேவை வரி அதிகரிப்பு பணவீக்கம் வேகமாக உயர வழிவகுக்கவில்லை என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூறியதை மீண்டும் வலியுறுத்தினார்.

2023, 2024ஆம் ஆண்டுகளில் வரி விகிதம் உயர்த்தப்பட்ட பின்னர் விலை அதிகரிப்பு மிதமாக இருந்ததைச் சுட்டிய அவர், போர், விநியோகச் சங்கிலி இடையூறுகள் போன்றவற்றைப் பணவீக்கத்தின் முக்கியக் காரணிகளாகக் குறிப்பிட்டார்.

சமூகச் செலவினங்கள், குறிப்பாக மருத்துவம், வாழ்வாதாரச் செலவுகளுக்கான ஆதரவுத் திட்டங்கள் அரசின் முக்கிய முன்னுரிமையாகத் தொடரும் என்றும் திரு முரளி தெரிவித்தார்.

உற்பத்தித் திறனும் மக்கள் தொகையும் பொருளாதார வளர்ச்சியில் முக்கியக் காரணிகளாக இருப்பதால், இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் அவற்றை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து உரையாற்றிய திரு சீனி, ஒரு பொருளியல் வல்லுநரின் கண்ணோட்டத்தில் இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்களை விளக்கியதுடன் தமது கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார்.

அவரது உரையைத் தொடர்ந்து கேள்வி, பதில் அங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்பாளர்கள் இரண்டு பேச்சாளர்களிடமும் கேள்விகளை முன்வைத்தனர்.

இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கத்திடமிருந்து பெறக்கூடிய அனுகூலங்களையும் பலன்களையும் சிங்கப்பூர் இந்திய அமைப்புகள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் பணத்தைச் சிறிது காலம் கழித்து இருமடங்காக அல்லது அதைவிட அதிகமான அளவில் மக்களிடமிருந்து திரும்ப எடுத்துகொள்கிறது என்ற கருத்து பொதுமக்களிடையே நிலவுவதாகப் பங்கேற்பாளர்களில் ஒருவர் தெரிவித்தபோது, வளர்ந்துவரும் செலவினக் கவலைகள் இதுபோன்ற கருத்துகளுக்கு முக்‌கியக் காரணமாக இருக்கலாம் என்று திரு முரளி கூறினார்.

“பொதுக் கருத்து யதார்த்தத்தை வடிவமைக்கிறது,” என்று கூறிய அவர், எந்த அரசாங்கமாக இருந்தாலும், இத்தகைய கருத்துகளினால் சமூகத்தில் தாக்கம் ஏற்படக்கூடும் என்றார்.

உண்மையான தகவல்களையும் வரவுசெலவுத் திட்டத்தின் விவரங்களையும் பற்றி நன்கு புரிந்துகொண்டு நம்மைச் சுற்றியிருப்போருக்கும் அதை எடுத்துரைப்பதே இதனைச் சமாளிப்பதற்கான முதல் படி என்றார் திரு முரளி.

குறிப்புச் சொற்கள்