வரவுசெலவுத் திட்டம் 2024

எல்லாத் தரப்பினருக்கும் ஆதரவு

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு போன்ற உடனடிச் சவால்களுக்கும் வலுவான பொருளியல் வளர்ச்சி, சிறந்த வேலைவாய்ப்பு போன்ற நீண்டகால இலக்குகளுக்கும் தீர்வுகாணும் நோக்குடன் வரவுசெலவுத் திட்ட அறிக்கை 2024 அமைந்துள்ளது.

குடும்பங்கள், ஊழியர்கள், தனிமனிதர்கள், மூத்தோர் என எல்லாத் தரப்பினருக்கும் ஏதேனும் ஓர் உதவித் திட்டம், வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டங்களுக்கான முதல் தவணையாக வரவுசெலவுத் திட்டம் 2024 அமைகிறது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்து உரையாற்றியபோது குறிப்பிட்டார்.

மொத்தம் $131.4 பில்லியன் மதிப்பிலான வரவுசெலவுத் திட்ட அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். இது, சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18.3 விழுக்காடு.

“துடிப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, நியாயமான, செழிப்புறும், மீள்திறன்மிக்க, ஒன்றுபட்ட தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான இலக்குகளை அடையும் லட்சிய நோக்கத்தின் ஒரு பகுதியே இந்த வரவுசெலவுத் திட்டம்,” என்று நிதியமைச்சருமான திரு வோங் கூறினார்.

இவ்வாண்டு, கடந்த 2023ஆம் ஆண்டைவிடச் சிறப்பானதாக இருக்கும் என்ற ‘எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கை’யுடன் இருப்பதாக அவர் சொன்னார்.

வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க உதவி

சிங்கப்பூரில் பல குடும்பங்கள் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு நெருக்கடியை எதிர்கொண்டு வருவதைத் திரு வோங் ஒத்துக்கொண்டார்.

இதன் காரணமாக, உத்தரவாதத் தொகுப்புத் திட்டமானது மேலும் $1.9 பில்லியனுடன் மேம்படுத்தப்படவுள்ளது. அதன்படி, வரும் ஜூன் இறுதி, அடுத்த ஆண்டு ஜனவரி என மொத்தம் $600 மதிப்புள்ள சிடிசி பற்றுச்சீட்டுகள் சிங்கப்பூர்க் குடும்பங்களுக்குக் கூடுதலாக வழங்கப்படும்.

அத்துடன், வாழ்க்கைச் செலவினச் சிறப்புத்தொகையாக $200 முதல் $400 வரை வழங்கப்படும்.

மேலும், 21 வயதிற்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களின் மெடிசேவ் கணக்குகளில் $300 முதல் $1,500 வரை பணம் நிரப்பப்படும்.

தனிநபர்களுக்கு $200 வரையும் நிறுவனங்களுக்கு $40,000 வரையும் வருமான வரிக்கழிவு வழங்கப்படும்.

ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆதரவு

வாழ்க்கைத்தொழிலின் இடைநிலையில் இருக்கும் ஊழியர்களுக்கான ஆதரவு இந்த வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய அம்சம்.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவி நிதியாக 40 மற்றும் அதற்குமேல் வயதுடைய சிங்கப்பூரர்களுக்கு $4,000 வழங்கப்படும்.

புதிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், இன்னொரு முழுநேர பட்டயப் படிப்பில் சேரவும் 2025ஆம் ஆண்டு முதல் மானியங்கள் வழங்கப்படும்.

இப்போது பணியிலிருந்து, அத்தகைய முழுநேரப் படிப்பில் சேரும் ஊழியர்களுக்கு மாதாந்தரப் பயிற்சிப் படியும் வழங்கப்படும்.

சிங்கப்பூர் போட்டித்தன்மையுடன் திகழவும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளை ஈர்க்கவும் திருப்பித் தரப்படும் முதலீட்டுத் தொகை எனும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நொடிக்கு 10 கிகாபைட் வரை விரிவலை வேகத்தை அதிகரிக்க தேசிய விரிவலைக் கட்டமைப்பில் முதலீடு செய்யப்படும்.

குறைந்த வருமான ஊழியர்களுக்கான வேலைநலன் வருமான ஆதரவுத் திட்டம், வேலைநலன் வழங்குதொகைகள் போன்றவை மேம்படுத்தப்படவுள்ளன.

தொழில்நுட்பக் கல்விக் கழகப் பட்டதாரிகள் தங்களது தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொள்ள ஆதரவளிக்கும் வகையில், தொழில்நுட்பக் கல்விக் கழக முன்னேற்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மூத்தோருக்கு உதவிக்கரம்

மூத்த குடிமக்களின் ஓய்வுக்காலத் தேவைகளிலும் வரவுசெலவுத் திட்டம் கவனம் செலுத்துகிறது.

வரும் 2025ஆம் ஆண்டிலிருந்து, 55 முதல் 65 வயதிற்குட்பட்டோருக்கான மத்திய சேம நிதிப் பங்களிப்பு விகிதம் 1.5 விழுக்காட்டுப் புள்ளி உயர்த்தப்படும்.

மேம்படுத்தப்பட்ட ஓய்வுக்காலத் தொகையானது, அடுத்த ஆண்டு முதல் நான்கு மடங்கு அடிப்படை ஓய்வுக்காலத் தொகையாக உயர்த்தப்படும். இப்போதைக்கு மேம்படுத்தப்பட்ட ஓய்வுக்காலத் தொகையானது, அடிப்படை ஒய்வுக்காலத் தொகையைப்போல் மூன்று மடங்காக இருந்து வருகிறது.

அத்துடன், 55 மற்றும் அதற்குமேல் வயதுடையோருக்கான சிறப்புக் கணக்கு அடுத்த ஆண்டு முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கணக்கில் இருக்கும் தொகை ஓய்வுக்காலக் கணக்கிற்கு மாற்றப்படும்.

முதியோர் ஆதரவுத் திட்டம், வெள்ளிக்கு வெள்ளி அடிப்படையில் மசே நிதி ஓய்வுக்காலக் கணக்கில் தொகை நிரப்பும் திட்டம் உள்ளிட்டவை மேம்படுத்தப்படும்.

சென்ற ஆண்டு தேசிய தினப் பேரணி உரையின்போது பிரதமர் லீ சியன் லூங் அறிவித்த ‘மாஜுலா தொகுப்புத் திட்டம்’ குறித்த கூடுதல் விவரங்களையும் திரு வோங் வெளியிட்டார்.

மாதம் $6,000 வரை வருமானம் ஈட்டும் முதியோர் தங்களது ஓய்வுக்காலத்திற்குக் கூடுதலாகச் சேமிக்க உதவும் ‘சம்பாதித்துச் சேமியுங்கள்’ போனஸ் திட்டம் அதில் அடங்கும். அத்துடன், அடிப்படை ஓய்வுக்காலத் தொகைக்கும் குறைவாக வைத்துள்ள முதியோருக்கு $1,000 முதல் $1,500 வரை ஒருமுறை மட்டும் ஓய்வுக்காலச் சேமிப்பு போனஸ் வழங்கப்படும்.

இவ்வாண்டிற்கான வரவுசெலவுத் திட்டமானது $0.8 பில்லியன் உபரித் திட்டமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, வரவுசெலவுத் திட்டம் 2024 குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் லீ, இந்த வரவுசெலவுத் திட்டத்தின்மூலம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் பலனடைவர் எனத் தான் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!