புக்கிட் தீமா விரைவுச்சாலையில் வியாழக்கிழமை (ஜூன் 26) நிகழ்ந்த விபத்தை அடுத்து நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் பாதையில் புக்கிட் பாஞ்சாங் வெளிவழிக்கு அருகே நடந்த விபத்து குறித்துக் காலை 7.50 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
சம்பவத்தில், இரு லாரிகளும் ஒரு வேனும் மோதிக்கொண்டதாகக் காவல்துறை குறிப்பிட்டது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் அனுப்பிய படத்தில் சம்பவ இடத்தில் மருத்துவ உதவி வாகனங்கள் நிற்பதைக் காண முடிகிறது.
விபத்தை அடுத்து, லாரி ஓட்டுநரான 67 வயது ஆடவரும் அவருடன் பயணம் செய்த 29 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட ஆடவர் மூவரும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
மற்றொரு லாரியை ஓட்டிய 30 வயது ஆடவர் காவல்துறை விசாரணையில் உதவிவருகிறார்.