புக்கிட் தீமா விரைவுச்சாலையில் ஜனவரி 14ஆம் தேதி மற்றொரு மோட்டார்சைக்கிளுடன் மோதிய 41 வயது மோட்டார்சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அந்த ஆடவர் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிகிறது.
தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் டெய்ரி ஃபார்ம் வெளியேறும் பாதைக்குப் பிறகு நடந்த விபத்து குறித்துச் சம்பவ நாளன்று பிற்பகல் 3.05 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பில் இணையத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் தீவு விரைவுச்சாலையின் வலப்பக்கத் தடங்கள் இரண்டுக்கு இடையே இரண்டு மோட்டார்சைக்கிள்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் செல்வதைக் காண முடிகிறது.
திடீரென்று முதலில் செல்லும் மோட்டார்சைக்கிள் வேகத்தைக் குறைப்பதும் பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் அதன் மீது மோதுவதும் அக்காணொளியில் பதிவாகியுள்ளது.
பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் விரைவுச்சாலையின் வலப்பக்கம் சென்று சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி நிற்பதும் அதில் தெரிகிறது.
காவல்துறை இச்சம்பவம் குறித்த விசாரணையைத் தொடர்கிறது.

