தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் மேரா நடைபாதையில் எரியூட்டப்பட்ட சீனக் காணிக்கைகள்

2 mins read
3063a735-3851-4244-a642-b31d29fb4569
நடைபாதையில் குவிக்கப்பட்டு எரிக்கப்படும் அந்த நோட்டுகளைத் தவிர்க்க பாதசாரிகள் ஒரு சுற்றை எடுத்து கடக்க வேண்டியிருந்தது. - படங்கள்: ஸ்டோம்ப்

ஆகஸ்ட் 29ஆம் தேதி மாலையில் நடைபாதையில் மக்கள் சீனக் காணிக்கைகளை எரிப்பதை புக்கிட் மேரா குடியிருப்பாளர் ஒருவர் ‘சுயநலமாகக்’ கருதினார்.

ஜாலான் புக்கிட் மேராவில் உள்ள புளாக் 11க்கு அருகில் இரவு 8 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோவை ஸ்டாம்ப் பயனாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

இதன் தொடர்பில் பேசிய அவர், “இதுபோன்ற தீச்சம்பவம் நிகழக்கூடிய செயல் பற்றிய விழிப்புணர்வைப் பரப்ப விழைகிறேன். சீனக் காணிக்கை வெள்ளி நோட்டுகளை எரிக்கும் இந்தச் செயல் மிகவும் கவனத்துடன் மேற்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம்,” என்றார்.

“ஒரு சுத்தமான காற்றைச் சுவாசிக்க வீட்டுக்கு வெளியே எட்டிப்பார்த்துதான் தாமதம். கீழே எரிக்கப்பட்டு அங்கும் இங்கும் சிதறும் சீன வெள்ளி நோட்டுகளின் சாம்பலும் கடும் புகையும் என்னைக் கிறங்க வைத்தன.

“நடைபாதையில் குவிக்கப்பட்டு எரிக்கப்படும் அந்த நோட்டுகளைத் தவிர்க்க பாதசாரிகள் ஒரு சுற்றை எடுத்து கடக்க வேண்டியிருந்தது,” என்று அவர் மேலும் கூறினார்.

அந்தக் குடியிருப்பாளர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கொடுத்தார்.

“இது பசித்திருக்கும் பேய் திருவிழா தொடர்பில் நடத்தப்படும் சடங்கு என்று அனைவரும் அறிந்ததே. இதுபோன்ற காகிதங்களை எங்கு எரிப்பது என்பது குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும். ஏனெனில் இதற்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் உள்ளன. வயதானவர்களும் குழந்தைகளும் நடந்து செல்லும் நடைபாதையில் இதைச் செய்வது அபத்தமானது, சுயநலமானது,” என்று அந்த ஸ்டாம்ப் வாசகர் கூறினார்.

“ஓன்பதாவது மாடியில் குடியிருக்கும் எனது வீட்டுக்கு அந்தச் சாம்பல் வருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று அவர் குறைப்பட்டுக் கொண்டார்.

எரிப்பதற்கான ஒரு தொட்டி அருகிலேயே இருந்தது. ஆனால் அது பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அழைக்கப்பட்டாலும், அது வந்தபோது அதன் உதவி தேவைப்படவில்லை என்பதை ஸ்டாம்ப் தெரிவித்தது.

பசித்திருக்கும் பேய்த்திருவிழா ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்