நார்வேயில் இம்மாதம் 12ஆம் தேதியன்று விபத்தில் சிக்கிய பேருந்து ஒன்றில் 24 சிங்கப்பூரர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். சாலையிலிருந்து சறுக்கிச் சென்று அப்பேருந்து ஓர் ஏரியில் பாதி மூழ்கியது. குளிர்காலத்தில் சுற்றுப்பயணிகளிடையே பிரபலமாக இருக்கும் லோஃபோட்டன் பகுதிக்கு அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்தது.
10 நாள் சுற்றுலாத் திட்டத்தின் ஐந்தாம் நாளன்று உள்ளூர் நேரப்படி காலை கிட்டத்தட்ட 10.30 மணிக்கு அவ்விபத்து நேர்ந்தது.
ஆக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிங்கப்பூரர்கள் அறுவர் கொண்டுசெல்லப்பட்டனர் என்று அந்த சுற்றுலாத் திட்டத்தை வழங்கிய ‘ஈயு ஹோலிடேஸ்’ (EU Holidays) நிறுவனத்தின் இயக்குநர் ஓங் ஹான்ஜியே தெரிவித்தார்.
விபத்தில் சிக்கிய பேருந்தில் பயணம் செய்த எல்லா பயணிகளும் திட்டமிட்டபடி இம்மாதம் 17ஆம் தேதியன்று சிங்கப்பூர் திரும்பினர் என்றார் அவர்.
எனினும், சிலர் இன்னமும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினர். மனதளவில் குணமடையும் வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதில்லை என்றும் சிலர் குறிப்பிட்டனர்.
பாதிக்கப்பட்ட 24 சிங்கப்பூரர்களுக்கும் ‘ஈயு ஹோலிடேஸ்’ அவர்கள் செலுத்திய கட்டணத்தில் 60 விழுக்காட்டைத் திருப்பித் தந்துவிட்டதாக திரு ஓங் கூறினார். விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தூதரக உதவியும் ஆதரவும் வழங்கியதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.