பொங்கோலில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) செடிகளில் ஏற்பட்ட தீயை அணைக்க உதவிய டவர் டிரான்சிட் பேருந்து ஓட்டுநர் ஒருவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
லிம் சுவின் சியென் எனும் பேருந்து ஓட்டுநர் இச்செயலில் ஈடுபட்டார்.
சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிய தெம்பனிஸ் விரைவுச்சாலைப் பகுதியில் பொங்கோல் ரோட்டுக்குள் நுழையும் சாலைக்கு முன்பு செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.10 மணியளவில் தீ குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
நீளம், அகலம் இரண்டும் ஏறத்தாழ 0.5 மீட்டர் பரப்பளவிலான செடிகளில் பற்றிய தீயை அணைக்கப் பொதுமக்கள் முயற்சி செய்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
தீயணைப்பு நீர்க் குழாயைக் கொண்டு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தீயை அணைத்தது. பேருந்துச் சேவை எண் 858ன் ஓட்டுநரான லிம் சுவின் சியென், தீ பெரிதாகி பேருந்து நிறுத்தத்தில் இருந்த மக்களுக்கு ஆபத்து விளைவிக்குமோ என்று அச்சம் கொண்டிருந்ததாக டவர் டிரான்சிட் சிங்கப்பூர் நிறுவனத்தின் தொடர்பு, வாடிக்கையாளர் அனுபவப் பிரிவு இயக்குநர் கிளென் லிம் தெரிவித்தார்.
தான் ஓட்டிக்கொண்டிருந்த பேருந்திலிருந்து பயணி ஒருவர் அந்த நிறுத்தத்தில் இறங்கிய பிறகு லிம் சுவின் சியென்னும் அங்கு இறங்கியிருக்கிறார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையை அழைக்குமாறு அந்தப் பயணியைக் கேட்டுக்கொண்டார்.
பிறகு தீயணைப்பு தெளிப்பானைக் கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்தார். பலத்த காற்று வீசிக்கொண்டிருந்ததால் அவர் இரண்டாவது முறையாகத் தீயை அணைக்க முயன்றதாக திரு கிளென் லிம் தெரிவித்தார்.
பயண நேரத்தில் தாமதம் ஏற்பட்டதற்காக திரு லிம் சுவின் சியென் பேருந்தில் இருந்த பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
தீயை அணைக்கத் தான் எடுத்த முயற்சிகள் காணொளி, படங்களாகப் பதிவுசெய்யப்பட்டு அவை சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது திரு லிம் சுவின் சியென்னுக்குத் தெரியாமல் இருந்தது. தனது திருமணத்தைப் பதிவுசெய்வதற்கான அவர் தனது சொந்த நாடான மலேசியாவுக்குச் சென்றார்.
“ஒருவேளை இது மங்களகரமான அறிகுறியாக இருக்கலாம்,” என்றார் 32 வயது லிம் சுவின் சியென்.
அவருக்கு ‘டவர் டிரான்சிட் சூப்பர்ஸ்டார்’ விருது வழங்கப்படும் என்று திரு கிளென் லிம் தெரிவித்தார். அதோடு, வரும் பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி அவருக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ‘சமூக முன்கள நடவடிக்கை’ விருதும் (Community First Responder Award) சடங்கு ஒன்றில் வழங்கப்படும்.

