சிங்கப்பூரில் இந்த ஆண்டின் (2025) முற்பாதியில் பதிவு செய்யப்பட்ட புதிய கார்களின் எண்ணிக்கையில் சீனாவில் தயாரிக்கப்படும் ‘பிஓய்டி’ மின்கார்கள் முன்னிலையில் உள்ளன.
இந்த ஆண்டின் முற்பாதியில் 4,667 புதிய ‘பிஒய்டி’ கார்கள் பதிவு செய்யப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (ஜூலை 28) வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
சென்ற ஆண்டின் முற்பாதியுடன் ஒப்புநோக்க, அது 80.4 விழுக்காடு அதிகம். 2024 முற்பாதியில் 2,587 ‘பிஒய்டி’ கார்கள் இங்கு விற்பனையாயின.
2025 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை சிங்கப்பூரில் 23,957 புதிய கார்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 19.5 விழுக்காட்டு கார்கள் ‘பிஒய்டி’ மின்கார்கள். சென்ற ஆண்டின் முற்பாதியில் இந்த விகிதம் 13.9 விழுக்காடாகப் பதிவானது.
இந்த ஆண்டு புதிய கார்களின் விற்பனையில் ‘டயோட்டா’ நிறுவனம் இரண்டாம் நிலையில் உள்ளது. அதன் 3,461 புதிய கார்கள் இந்த ஆண்டு முற்பாதியில் இங்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ஜெர்மனியில் தயாராகும் சொகுசு கார்களான ‘பிஎம்டபிள்யூ’, ‘மெர்சிடிஸ்-பென்ஸ்’ ஆகியவை விற்பனைப் பட்டியலில் முறையே மூன்றாம், நான்காம் நிலையில் உள்ளன.
ஐந்தாம் நிலையில் உள்ள ஜப்பானின் ‘ஹோண்டா’ நிறுவன கார்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டின் முற்பாதியைக் காட்டிலும் 50.5 விழுக்காடு அதிகரித்ததாகக் கூறப்பட்டது.