ஆளில்லா வானூர்திகளின் பாதுகாப்பான, பொறுப்பான பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில், சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அதன் செயல்பாடுகளை நிர்வகிக்கும் விதிமுறைகளைத் தளர்த்துவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது.
தற்போது ஆணையத்தின் அனுமதியின் பேரில், வாரநாள்களிலும் வாரயிறுதி நாள்களிலும் ஆளில்லா வானுர்திகள் 200 அடி வரை பறக்க மட்டுமே அனுமதிக்கிறது. 200 அடிக்குமேல் உள்ள செயல்பாடுகள் வாரயிறுதி நாள்களில் மட்டுமே அனுமதிக்கப்படும்.
வாரயிறுதி நாள்களை விட, வாரநாள்களில் 200 அடிக்குமேல் அதிகமான செயல்பாடுகளை நடத்த அனுமதிப்பதால் நீக்குப்போக்குத்தன்மையை அதிகரித்து, ஊழியர் செலவைக் குறைக்கலாம் என்று தொழில்துறையினர் கருத்து கூறியுள்ளனர்.
அதன் அடிப்படையில் ஆணையம் தொடர்புடைய முகவைகளுடன் ஆலோசனை நடத்தி, ஆளில்லா வானூர்திகளை இயக்க வார நாள்கள் மற்றும் வாரயிறுதி நாள்களிலும் சுமார் 400 அடி வரை செயல்பட அனுமதிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார்.
2024ல் நடப்புக்கு வந்த ஆளில்லா வானுர்தி செயல்பாடு தொடர்பிலான விண்ணப்பங்களில் கால்பங்கு, 200 அடி முதல் 400 அடி வரையிலான செயல்பாடுகளுக்கானவை என்று குறிப்பிட்ட அமைச்சர், இந்தப் புதிய மாற்றம் அவர்களுக்குப் பயனளிக்கும் என்றார்.
தொடர்ந்து அது குறித்து பேசிய அமைச்சர் சீ, “மேலும் இந்த விதிமுறைகளை நாம் தளர்த்தும்போது, ஆளில்லா வானுர்திகளை இயக்குபவர்களிடமிருந்து கூடுதல் விண்ணப்பங்கள் வரக்கூடும் என்று நான் நம்புகிறேன்.
“அதன் அடிப்படையில், இந்நேரத்தில் 25 விழுக்காடாக இருக்கும் இவ்விகிதம் அதிக எண்ணிக்கைக்கு உயரும் என்றும் எதிர்பார்க்கிறேன்,” என்றார்.
இந்த நடவடிக்கைகள் 2025 ஜனவரிக்குள் செயல்படுத்தப்படும் என்றும் இது குறித்த மேல்விவரங்களை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சம்பவக் கண்காணிப்பு, மற்றும் பதிலளித்தல், உயிர்காக்கும் உபகரணங்களைக் கரையிலிருந்து கப்பலுக்குக் கொண்டு செல்லுதல், துறைமுக நீர்நிலைகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஆளில்லா வானுர்தி பயன்பாட்டை எளிதாக கைகொள்வது குறித்த பயன்பாட்டு சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்தப்படுவதாகவும் அமைச்சின் செய்திக்குறிப்பு சுட்டியது.

