தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கெல்வின் செங்கின் கருத்துகள் அறவே ஏற்கமுடியாதவை: பிரதமர் வோங்

2 mins read
d973b2c0-1583-496d-8e0a-d2e6e8a8a483
மதரசா அல்ஜுனிட் அல்-இஸ்லாமியாவில் உஸ்தாஸ் முகம்மது ஹஸ்பி ஹசானையும் (இடக்கோடி) உஸ்தாஸ் பசுனி மெளலானையும் பிரதமர் லாரன்ஸ் வோங் சந்தித்தார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
multi-img1 of 2

ஆர்வலர்கள் சிலரை சிங்கப்பூரிலிருந்து காஸாவுக்கு இடம் மாற்றலாம் என்ற முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கெல்வின் செங்கின் கருத்துகள் முற்றிலும் பிறரின் உணர்வுகளைக் கருத்தில்கொள்ளாமல் வெளியிடப்பட்டவை என்றும் அவை அறவே ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தின் தொடர்பில் தமது கருத்துகளை உஸ்தாஸ் முகம்மது ஹஸ்பி ஹசான், உஸ்தாஸ் பசுனி மெளலான் இருவருடனும் பகிர்ந்துகொண்டதாக திரு வோங் வியாழக்கிழமை (ஏப்ரல் 10) ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். பிரதமர் வோங், அவ்விருவரையும் முன்னதாக வியாழக்கிழமையன்று விக்டோரியா லேனில் உள்ள மதரசா அல்ஜுனிட் அல்-இஸ்லாமியாவில் சந்தித்தார்.

உஸ்தாஸ் ஹஸ்பி, சிங்கப்பூர் இஸ்லாமிய கல்விமான்கள், சமய ஆசிரியர்கள் சங்கத்தின் (பெர்காஸ்) மூத்தோருக்கான குழுவின் தலைவராவார். உஸ்தாஸ் பசுனி, அதே குழுவில் ஓர் உறுப்பினர்.

அவ்விருவரும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்திலும் (முயிஸ்) இருக்கின்றனர்.

இன்று சிங்கப்பூரில் காணப்படும் இன, சமய ஒற்றுமை பலதரப்பட்டது, அதேவேளையில் நல்லிணக்கம் வாய்ந்தது; இது, பல தலைமுறைகளாகப் பொறுமையுடன் மேற்கொள்ளப்பட்ட கடின உழைப்புக்குக் கிடைத்த பலன் என்று பிரதமர் வோங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

“இதை நாம் பொக்கி‌ஷமாகக் கருதவேண்டும், பாதுகாக்கவேண்டும், ஊக்குவிக்கவேண்டும்,” என்றார் அவர். “நமது சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தக்கூடிய நாட்டுக்கு அப்பால் காணப்படும் சக்திகள் இருக்கும் தற்போதைய நிலையற்ற சூழலில் இது (சமூக நல்லிணக்கத்தை அடைவதற்குப் போடப்பட்ட உழைப்பு) மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது,” என்றும் திரு வோங் விவரித்தார்.

சிங்கப்பூர், மலேசியாவின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில் புண்படுத்தும் கருத்துகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இன ரீதியான குமுறல் இருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், அதிலிருந்து சிறுபான்மையினரை என்றும் தவறாக நடத்தக்கூடாது என சிங்கப்பூர் முடிவெடுத்ததாகக் குறிப்பிட்டார்.

“நாம் சாதித்திருப்பதைத் தொடர்ந்து மேம்படுத்துவோம், சிறிய சிவப்புப் புள்ளியான நமது தேசம் தொடர்ந்து நிலைத்தன்மையையும் நல்லிணக்கத்தையும் சித்திரிக்கும் ‘விளைநிலமாக’ இருப்பதை உறுதிசெய்வோம்,” என்று திரு வோங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்