தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரத்தான ஜெட்ஸ்டார் ஏ‌ஷியா சேவைகள்: கட்டணத்தைத் திரும்பப் பெறுவதில் சிரமம்

2 mins read
a1e9ff99-74eb-436e-bc70-3ebe947d88a0
வரும் ஜூலை மாதம் 31ஆம் தேதி ஜெட்ஸ்டார் ஏ‌ஷியா அதன் சேவைகளை நிறுத்திக்கொள்ளும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜெட்ஸ்டார் ஏ‌ஷியா விரைவில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்ட மறுநாளும் ரத்துசெய்யப்பட்ட அவ்விமான நுழைவுச்சீட்டுகளை வாங்கத் தாங்கள் செலுத்திய கட்டணங்களைத் திரும்பப் பெறுவதில் சிக்கல்களை எதிர்நோக்கிவருவதாகப் பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவித்துள்ளனர்.

பயணச்சீட்டுக் கட்டணத்தைத் திரும்பப் பெற முடியாது என்று தங்களுக்குத் தகவல் குறிப்புகள் (notifications) அனுப்பப்பட்டதாக சில ஜெட்ஸ்டார் பயணிகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர். கட்டணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்க, வேலை செய்யாத இணைய முகவரிகள் தங்களுக்கு அனுப்பப்பட்டதாக வேறு சிலர் குறிப்பிட்டனர்.

சிங்கப்பூரில் இயங்கும் ஜெட்ஸ்டார் ஏ‌ஷியா வரும் ஜூலை மாதம் 31ஆம் தேதி மூடப்படும் என்று புதன்கிழமை (ஜூன் 11) அறிவிக்கப்பட்டது. அதிகரித்துவரும் செலவுகள், வட்டார அளவில் போட்டி கூடிவருவது ஆகியவை அதற்கான காரணங்கள் என்று அது குறிப்பிட்டது.

அந்த அறிவிப்புக்குப் பிறகு பயணச்சீட்டுகளுக்காகத் தாங்கள் செலுத்திய கட்டணங்களைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம் அல்லது பயணங்களை வேறு விமானச் சேவைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம் என்று ஜெட்ஸ்டார் ஏ‌ஷியா வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல்வழி கட்டங்கட்டமாகத் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.

புதன்கிழமையிலிருந்து வியாழக்கிழமை (ஜூன் 12) வரை இதன் தொடர்பில் தங்களுக்கு மூன்று புகார்கள் வந்திருப்பதாக சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் தெரிவித்தது. ஜெட்ஸ்டார் ஏ‌ஷியா இணையத்தளத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பது, யாரைத் தொடர்புகொள்வது என்ற குழப்பம் நிலவுவது போன்றவை அதற்கான காரணங்கள் என்று புகார் தந்தவர்கள் குறிப்பிட்டனர்.

கட்டணத்தைத் திரும்பத் தருவது, பயணங்களை வேறு விமானச் சேவைகளுக்கு மாற்றிக்கொள்வது ஆகிய நடவடிக்கைகளை ஜெட்ஸ்டார் ஏ‌ஷியா எவ்வாறு மேற்கொள்ளவிருக்கிறது என்பதை அறிய அந்நிறுவனத்துடன் தாங்கள் இணைந்து செயல்பட்டுவருவதாக சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங் கூறியுள்ளார். தாங்கள் செலுத்திய கட்டணங்களைத் திரும்பப் பெறுவது என்பது வாடிக்கையாளர்களின் உரிமை என்று ஜெட்ஸ்டார் ஏ‌ஷியா பேச்சாளர் ஒருவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்