சாங்கி விமான நிலையத்தின் முனையம் 3 அருகே கார் ஒன்று செப்டம்பர் 18ஆம் தேதி தீப்பற்றிக்கொண்டது.
தீச்சம்பவம் குறித்துத் தங்களுக்குப் பகல் 3 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் இல்லை என்றும் கூறப்பட்டது.
தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் கருவியைக் கொண்டு நெருப்பை அதிகாரிகள் அணைத்தனர்.
நெருப்பு மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிரவுன் பிளாசா சாங்கி விமான நிலையம் அருகே அடர்த்தியான, கரும்புகை மேல்நோக்கி எழுவதைக் காட்டும் காணொளி பகிரப்பட்டு வருகிறது.
காரின் சில பகுதிகள் கருகிப்போயிருந்தன.
வாகனம் தொடர்பான தீச்சம்பவங்கள் 2023ஆம் ஆண்டில் 215 என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அண்மைய வருடாந்தர புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது 2022ன் 204 சம்பவங்களைக் காட்டிலும் 5.4% அதிகரிப்பாகும்.