சிங்கப்பூரின் ஆகப் பெரிய பழைய கார் விற்பனை மையத்தின் குத்தகையைப் புதுப்பிக்க அங்குள்ள கார் விற்பனையாளர்கள் $68 மில்லியனைத் திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
உபி வட்டாரத்தில் உள்ள ஆட்டோமொபைல் மெகாமார்ட்டில் உள்ள 76 கார் விற்பனைக்கூடங்களின் உரிமையாளர்களும் இத்தொகையை இவ்வாண்டு மே மாதம் 15ஆம் தேதிக்குள் செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு அவர்கள் செய்யத் தவறினால், ஜூலை 18க்குள் அந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும்.
பாய லேபார் விமானத் தளத்திற்கு அருகிலுள்ள உபி தொழில்துறைப் பகுதியில் அமைந்துள்ள இந்த எட்டு மாடி வளாகம், 121 கார் விற்பனைக்கூடங்கள் மற்றும் அலுவலகங்களைக் கொண்டது.
இங்குள்ளவர்கள் பெரும்பாலும் புதிய, பழைய கார்களை விற்பவர்கள். அத்துடன் வாகனத்தைக் குத்தகைக்கு விடுவது, கார் வாங்க கடன் வழங்குவது போன்றவற்றையும் செய்து வருகின்றனர்.
இந்த வளாகம் அமைந்துள்ள நிலத்துக்கான 30 ஆண்டு குத்தகை 1996ஆம் ஆண்டில் கார் விற்பனையாளர்கள் அடங்கிய ஒரு குழுவுக்கு வழங்கப்பட்டது.
இந்தக் கட்டடம் 2000ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
குத்தகையைப் புதுப்பிப்பது வெற்றிகரமாக முடிந்தால், இங்குள்ளவர்கள் 2040ஆம் ஆண்டு இறுதிவரை தொடர்ந்து அங்கு இருக்க முடியும்.
மே மாதம் 15ஆம் தேதி என்ற இந்தக் காலக்கெடுவானது, இதற்கு முந்தைய பல நீட்டிப்புகளுக்குப் பிறகு சிங்கப்பூர் நில ஆணையத்தால் வழங்கப்பட்ட நான்கு வாரங்களுக்கான இறுதி நீட்டிப்பாகும்.
தொடர்புடைய செய்திகள்
குத்தகையைப் புதுப்பிக்கும் செயல்முறையின் பல கட்டங்களில், உரிமையாளர்களால் ஒருமனதான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
இதனால், ஆணையம் அதனைத் திருத்தியமைத்து இரண்டாவது வாய்ப்பை வழங்குவதற்கு முன்பாக, குத்தகையைப் புதுப்பிப்பதற்கான வாய்ப்பு ஒருமுறை காலாவதியானது.
2026ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதியன்று முடிவடைய உள்ள இந்தக் குத்தகையைப் புதுப்பிப்பது தொடர்பாக, மார்ச் 2024 முதல் வளாகத்தின் உரிமையாளர்களுடன் இணைந்து செயல்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

