காருடன் மோதிக்கொண்ட விபத்தில் 62 வயது மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1 - ஜூரோங் டவுன் ஹால் சாலைச் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) மாலை 4.50 மணியளவில் அவ்விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
காயமுற்ற ஆடவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அதில் சாம்பல் நிற கார் ஒன்று, சாலையின் வலதோரத் தடத்தில் நின்றிருப்பதைக் காண முடிகிறது. அதற்குப் பின்னால் மூன்று மோட்டார்சைக்கிள்கள் இருப்பதும் அவற்றில் ஒன்று கவிழ்ந்து கிடப்பதும் தெரிகிறது.
கவிழ்ந்த மோட்டார்சைக்கிளுக்கு அருகே ஆடவர் ஒருவர் விழுந்து கிடப்பதையும் சாலையில் அவருடைய உடைமைகள் சிதறிக் கிடப்பதையும் படங்கள் காட்டின.
விபத்து குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.