கரிம வரிச் சலுகையானது நிறுவனங்கள் பசுங்குடில் வாயுக்களைத் (Greenhouse gases) தொடர்ந்து வெளியிடுவதற்கான ‘இலவச அனுமதிச்சீட்டு’ அன்று எனப் பருவநிலை மாற்றத்திற்கான செயலகம் தெரிவித்துள்ளது
அத்தகைய சலுகைகள் கரியமில வாயு வெளியீட்டின் ஒரு பகுதியைத்தான் உள்ளடக்கும் என்றும் அத்தகைய சலுகைகளைப் பெறுவதற்கு கரியமிலவாயு நீக்கம் தொடர்பான திட்டங்களை நிறுவனங்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும் செயலகம் செப்டம்பர் 9ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
அதே நாளில் ‘அரசாங்கத்திற்கான வெளிப்படையான கேள்வி’ என்பதனை சுற்றுச்சூழல் குழுக்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளிதழ் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தது செயலகம்.
2024, 25ஆம் ஆண்டுகளில் வெளியேற்றப்படும் ஒரு டன் கரியமில வாயுக்கான வரி $5லிருந்து $25க்கு அதிகரிக்கப்பட்டது.
வரி அதிகரிப்புடன், உலகளவில் வலுவான போட்டியை எதிர்கொள்ளும் தகுதியுள்ள நிறுவனங்களுக்குக் கரிம வரி தள்ளுபடிகளும், செலவுப்படிகள் வடிவில் வழங்கப்பட்டுள்ளன.
இத்தகைய நிறுவனங்கள் வேதிப்பொருள்கள், மின்னணுவியல், உயிர்மருத்துவ உற்பத்தித் துறைகளிலிருந்து வரலாம்.
முக்கியமாக உற்பத்தி, மின்சாரம், கழிவு மற்றும் நீர் துறைகளிலிருந்து கிட்டத்தட்ட 50 கரிம வரி செலுத்தும் நிறுவனங்கள் சிங்கப்பூரில் தற்போது உள்ளன.
இவை தேசிய அளவிலான 70 விழுக்காட்டளவு கரியமில வாயு வெளியீடுகளுக்குக் காரணமாகின்றன. மேலும், எத்தனை நிறுவனங்கள் கரிமவரி தள்ளுபடியை பெற்றுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, செயலகம் அளித்துள்ள பதிலில், பசுமைப் பாதைக்கு மாறிடும் வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், மேலும் இதன் தொடர்பில் நிறுவனங்கள் கரிமவரிகள் இல்லா மற்ற நாடுகளுக்குச் செல்வதைத் தடுப்பதற்கும் இந்தச் செலவுத்தொகைகள் இலக்கு கொண்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
நிறுவனங்களின் இத்தகைய இடமாற்றம் இங்குள்ள வேலைகளையும் பொருளியலையும் பாதிக்கும். அதே நேரத்தில் நிறுவனங்கள் அயல்நாடுகளில் கரிமவாயுவை தொடர்ந்து வெளியேற்றவும் அனுமதிக்கும். இந்த நிகழ்வு கரிமக் கசிவு என்று குறிப்பிடப்படுகிறது என்றும் விவரித்தது செயலகம்.
மேலும், இந்த இடர் தற்போது நிலவும் அரசியல், பொருளியல் சார்ந்த சாதகமற்ற சூழலுக்குப் பொருந்தும் என்று அது மேலும் கூறியது.