தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடுமையாகக் காயமடைந்தோரின் சிகிச்சையை மேம்படுத்த புதிய ஏற்பாடு

3 mins read
4aee04dd-d265-41fb-94e5-c00cb203421f
கடுமையாகக் காயமடைந்தவர்களுக்கான அவசர சிகிச்சையின்போது எடுக்கும் முடிவுகள் மிக முக்கியமானவை. அத்தகைய சிகிச்சையின்போது பெரும்பாலும் நிலைமை மோசமாகும். உயிரைக் காப்பாற்றுவதற்கான நேரம் குறைந்துகொண்டே இருக்கும். - படம்: டான் டோக் செங் மருத்துவமனை

கடுமையாகக் காயமடைந்தவர்களுக்கான அவசர சிகிச்சையை (Trauma care) மேம்படுத்த மத்திய சிங்கப்பூரில் ‘சைக்கிள் சக்கரம்’ பாணியில் ஓர் ஏற்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.

இது, மோசமாகக் காயமடைந்த நோயாளிகள் மிகவும் பொருத்தமான மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வாய்ப்பை அதிகரிப்பதுடன், விரைவான சிகிச்சைக்கு வழிவகுத்து இறப்பு விகிதங்களைக் குறைக்கிறது.

மிகவும் சிக்கலான, தீவிர சிகிச்சை தேவைப்படும் சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற, டான் டோக் செங் மருத்துவமனையின் அவசர சிகிச்சை மையம் (டிடிஎஸ்எச்) சக்கரத்தின் மையமாகச் செயல்படும். மத்திய சிங்கப்பூரில் உள்ள மற்ற மருத்துவமனைகள், சக்கரத்தை இணைக்கும் கம்பிகள்போலச் செயல்பட்டு, மிதமானது முதல் தீவிரம் குறைந்த நோயாளிகளைக் கவனிக்கும்.

இந்தச் சிகிச்சை சக்கரத்தில், வெவ்வேறு சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களைச் சேர்ந்த கூ டெக் புவாட் மருத்துவமனை (கேடிபிஎச்), உட்லண்ட்ஸ் சுகாதார மையம் (டபிள்யூஎச்), செங்காங் பொது மருத்துவமனை (எஸ்கேஎச்), ராஃபிள்ஸ் மருத்துவமனை, கேகே மாதர், குழந்தைகள் மருத்துவமனை (கேகேஎச்) ஆகியவை அடங்கும்.

“வளங்களை அதிகபட்சம் பயன்படுத்த இந்த ஏற்பாடு உதவுகிறது. சிங்கப்பூரில் உள்ள எட்டு சிறப்பு அவசர அறுவை சிகிச்சை நிபுணர்களில் நால்வர் டிடிஎஸ்எச்-இல் உள்ளனர்,” என்று டிடிஎஸ்எச் அவசர சிகிச்சை மையத்தின் இயக்குநர் டாக்டர் டியோ லி செர்ங் புதன்கிழமை (ஜூலை 16) செய்தியாளர்களிடம் கூறினார். இதர சிறப்பு அவசர அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்ற மூன்று மருத்துவமனைகளைச் சேர்ந்தவர்கள்.

சாலை விபத்துகள், மோசமாக விழுதல் அல்லது தாக்கப்படுவதால் பல கடுமையான காயங்கள் அல்லது பல உறுப்புகளின் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களுக்கான இந்த சிகிச்சை ஏற்பாட்டு முறை, ஜூலை 17 முதல் 18 வரை சன்டெக் சிங்கப்பூர் மாநாடு, கண்காட்சி மையத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் அவசர, தீவிர சுகாதாரக் கவனிப்பு மாநாடு 2025ல் பகிரப்பட்டது.

சிங்கப்பூரில் மரணத்திற்கான முதல் 10 காரணங்களில் ஒன்றாக அதிர்ச்சிக் காயங்கள் உள்ளன. இதுகுறித்த தேசிய பதிவின்படி 2021க்கும் 2023க்கும் இடைப்பட்ட காலத்தில் 100,000 பேரில் 8 பேர் கடுமையான காயத்துக்குச் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 10ல் ஏழு பேர் 65 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்கள். ஐவரில் ஒருவர் உயிர் பிழைக்கவில்லை, 50 பேரில் ஒருவர் மிதமான காயங்களால் இறந்துள்ளார்.

இது புதிய சிகிச்சை ஏற்பாட்டு முறை அல்ல என்றாலும், இது “இரு வழி நோயாளி சிகிச்சை” ஏற்பாட்டைக் கொண்டுள்ளது.

காயமடையும் அனைவரையும் டிடிஎஸ்எச் அவசர சிகிச்சை மையத்துக்குக் கொண்டு செல்லாமல், கடும் காயமடைந்தவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளித்து, அவரது நிலைமை சற்று மேம்பட்டதும் சிக்கலான, உயிருக்கு ஆபத்துள்ள சிகிச்சைக்கு டிடிஎஸ்எச்சுக்கு கொண்டு செல்லப்படுவார். சிகிச்சை முடிந்த பின்னர் அவர் மற்ற மருத்துவமனைக்கு மாற்றப்படலாம்.

நோயாளியின் நிலைமை மிக மோசமாக இருந்தால் டிடிஎஸ்எச் மையத்தின் நிபுணர்கள் அவர் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை அளிப்பர் என்று டாக்டர் டியோ விளக்கினார்.

“சிங்கப்பூர் சிறிய பரப்பளவையும் குறுகிய போக்குவரத்து நேரத்தையும் கொண்டிருந்தாலும் மோசமாக காயமடைந்த நோயாளியை மையத்திற்கு அழைத்துச் செல்ல ஆகும் ஐந்து நிமிடங்களும் மிகவும் முக்கியமானது” என்றார் அவர்.

டிடிஎஸ்எச் அவசர சிகிச்சை நிலையம் செங்காங் மருத்துவமனையுடன் இணைந்து 2016ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.

“இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இதை (மாதிரியை) முழுமையாகச் செயல்படுத்த முயற்சி செய்கிறோம். ஏனைய சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களுக்கும் இது முன்மாதிரியாக இருக்கும்,” என்று டாக்டர் டியோ கூறினார்.

குறிப்புச் சொற்கள்