தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பூனை உரிமத் திட்டம்: 24,000க்கும் அதிகமான பூனைகளுக்கு உரிமம்

2 mins read
646c4539-fd7f-4a6f-8043-49c1f1ada1fe
செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகளுக்கு நுண்சில்லுகள் பொருத்தும் நிகழ்வு சனிக்கிழமையன்று (பிப்ரவரி 8) புக்கிட் மேரா உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அதில் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பூனை உரிமத் திட்டம் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து நடப்பில் உள்ளது.

இத்திட்டத்தின்கீழ் இதுவரை 24,000க்கும் அதிகமான பூனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு அவற்றுக்கு நுண்சில்லுகள் பொருத்தப்பட்டுள்ளன.

உரிமம் பெற்ற பூனைகளில் 97 விழுக்காட்டுப் பூனைகளுக்குக் கருத்தடை செய்யப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 24,000க்கும் அதிகமான பூனைகளின் உரிமையாளர்கள் இணையம் மூலம் நடத்தப்படும் செல்லப்பிராணி உரிமையாளருக்கான பயிற்சியைப் பூர்த்தி செய்துவிட்டனர்.

பூனை உரிமத்துக்கு முதன்முறையாக விண்ணப்பம் செய்பவர்கள் இப்பயிற்சியைப் பூர்த்தி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகளுக்கு நுண்சில்லுகள் பொருத்தும் நிகழ்வு சனிக்கிழமையன்று (பிப்ரவரி 8) புக்கிட் மேரா உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

அதில் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் கலந்துகொண்டு இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

தேசிய பூங்காக் கழகத்தின் விலங்குகள், விலங்கியல் மருத்துவச் சேவையின் புதிய பூனைகள் நிர்வாகக் கட்டமைப்பின்கீழ் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகளுக்கு உரிமம் பெறுவதும் நுண்சில்லுகள் பொருத்துவதும் அதிகரித்துள்ளதாக திரு டான் கூறினார்.

இவ்வாண்டில் பூனைகளுக்கு நுண்சில்லுகள் பொருத்துவதில் கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என்றார் அவர்.

ஒருவேளை பூனைகளிடையே கிருமிப் பரவல் ஏற்பட்டால் பாதிக்கப்படக்கூடிய பூனைகளை அடையாளம் காண இந்த முறை உதவும்.

“செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகளுக்கு இலவசமாக நுண்சில்லுகளைப் பொருத்த 11 நிகழ்வுகளுக்கு 2024ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2,800க்கும் அதிகமான பூனைகளுக்கு நுண்சில்லுகள் பொருத்தப்பட்டன. நுண்சில்லுகளைப் பொருத்துவதற்கான தேவை அதிகம் இருப்பதால் இவ்வாண்டு மேலும் 30 நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது,” என்று திரு டான் தெரிவித்தார்.

செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் அனைத்துப் பூனைகளுக்கும் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் நுண்சில்லுகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி தொடங்கி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பூனைகளுக்கான உரிமங்கள் இலவசமாக வழங்கப்படும்.

அதன் பிறகு, கருத்தடை செய்யப்பட்ட பூனைக்கான ஓராண்டு உரிமத்துக்குக் கட்டணம் $15.

கருத்தடை செய்யப்படாத பூனைக்கான ஓராண்டு உரிமக் கட்டணம் $90.

புதிய கட்டமைப்பின்கீழ் ஒவ்வொரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டிலும் அதிகபட்சம் இரண்டு பூனைகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படலாம்.

ஒவ்வொரு தனியார் வீட்டிலும் அதிகபட்சம் மூன்று பூனைகளைச் செல்லப்பிராணிகளாக வளர்க்கலாம்.

குறிப்புச் சொற்கள்