அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் முயற்சி இல்லாமல் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் சாத்தியமில்லை என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலும் ஹமாசும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக புதன்கிழமை (அக்டோபர் 8) அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததன் தொடர்பில் அமைச்சர் சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
“அமெரிக்காவால் மட்டுமே இஸ்ரேல் நடவடிக்கைகளின் நோக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்,” என்றார் திரு சண்முகம்.
“ஊடக அறிக்கைகளும் தலைப்புச் செய்திகளும் ஊக்கமளிக்கின்றன. ஆனால், இலக்கு எட்டப்படும்வரை முயற்சி ஒருபோதும் முடிவுறாது,” என்றும் அவர் சொன்னார்.
காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தும் என்பதும் அதேபோல் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்பதும் அமைதி ஒப்பந்தத்தின் முதற்கட்டம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “முன்பு இருந்ததைவிட இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்த நிலைமை தொடர்பில் சற்று கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,” என்று திரு சண்முகம் கூறியுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் அதிபர் டிரம்ப் தனிப்பட்ட அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“அவர் தமது இலக்குகளை அடைவார் என்றும் அவை பாலஸ்தீன மக்களுக்கு உதவும் என்றும் நம்புகிறோம்,” என்று திரு சண்முகம் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
செய்தியாளர்களைச் சந்திப்பதற்குமுன், பாலஸ்தீனர் உபகாரச் சம்பளத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் முழுநேரமாகப் பயிலும் பாலஸ்தீன மாணவர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட அத்திட்டத்தின்கீழ் தற்போது நான்கு மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்படுகிறது.
கல்வி, தங்குமிடக் கட்டணங்களோடு வாழ்க்கைச் செலவுக்குத் தேவையான ஆதரவையும் இந்த உபகாரச் சம்பளத் திட்டம் பாலஸ்தீன மாணவர்களுக்கு வழங்குகிறது.
“கல்வி முடிந்து நாடு திரும்பும் அம்மாணவர்கள் காலப்போக்கில், பாலஸ்தீனத்திற்கும் சிங்கப்பூருக்கும் இடையே ஒரு பாலமாக அமைவார்கள்,” என்று அமைச்சர் சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.
பாலஸ்தீனர் உபகாரச் சம்பளத் திட்டத்துடன் நிதி திரட்டு, சிங்கப்பூர் ஆகாயப் படையின் நிவாரணப் பணி போன்ற வழிகளிலும் காஸாவிற்கு ஆதரவு வழங்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
சுதந்திரமானதொரு பாலஸ்தீன அரசைக் காண விரும்புவதாகவும் திரு சண்முகம் குறிப்பிட்டார்.