எளியோருக்கு நீதி கிடைக்க உதவிய வழக்கறிஞர்களுக்கு விருது

2 mins read
996feafc-f349-41f3-b11c-80c40ee720a2
சட்ட உதவி அமைப்பின் 66வது வருடாந்தர விருந்து மற்றும் விருது வழங்கும் விழாவில் உரையாற்றினார் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங். - படம்: இளவரசி ஸ்டீஃபன்
multi-img1 of 5

சட்ட உதவி நாடுவோருக்கு வழிகாட்டுவதும் சிலநேரம் வழக்கு முடியும்வரை அவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்படுவதும் மனநிறைவைத் தருகிறது என்கிறார் சட்ட உதவி அமைப்பின் (எல்ஏபி) தனிநபர் பிரிவுக்கான விருது பெற்ற வழக்கறிஞர் அருள்செல்வி செல்வராஜு.

சட்ட உதவி அமைப்பின் 66வது வருடாந்தர விருந்து, விருதளிப்பு விழா அக்டோபர் 24ஆம் தேதி மாலை நடைபெற்றது. இவ்விழாவில் சட்ட உதவி அமைப்பிற்கும் அதன்வழி சமூகத்திற்கும் சீரிய பங்காற்றிய வழக்கறிஞர்கள், சட்ட நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் தனிநபர் பிரிவில் விருது பெற்ற வழக்கறிஞர் அருள்செல்வி, 2018ஆம் ஆண்டு முதல் சட்ட உதவி அமைப்பில் இணைந்து சட்டச் சேவை வழங்கி வருகிறார்.

“கட்சிக்காரர்கள் பலர் வழக்கின் தொடக்கத்தில் கடுமையான மனப் போராட்டத்தில் உழல்வார்கள். அவர்களிடம் வழக்கின் நன்மையான முடிவை மனத்தில் நிலைநிறுத்தக்கோரி ஆலோசனை வழங்குவேன்.

“ஒரு வழக்கை எடுத்தால் அதைப் பாதியிலேயே விட்டுவிடக்கூடாது என்ற இலக்குடன் உழைத்து இறுதியாக அவ்வழக்கின் முடிவு, சம்பந்தப்பட்ட குடும்பங்கள், தனிநபர்களின் வாழ்வில் கிடைக்கும் பலன்களைக் காண்பதே இத்துறையில் என்னை மேன்மேலும் சட்ட உதவிகளை வழங்க இயக்குகிறது,” என்று தமிழ் முரசிடம் கூறினார் திருவாட்டி அருள்செல்வி.

விழாவில் தனிநபர் விருது பெற்ற வழக்கறிஞர் முகமது ஷஃபிக் பின் ஹாஜா மைதீன், “அமைப்பில் இணைந்து 2017ஆம் ஆண்டு முதல் சட்ட உதவிகள் புரிந்துவருகிறேன். இதுபோன்ற விருதுகள் இத்துறையில் இணையும் இளம் வழக்கறிஞர்கள் தன்னார்வத்துடன் சட்டச் சேவைகளில் ஈடுபட உற்சாகம் அளிக்கும்,” என்றார்.

“நீதிமன்றத்தில் இருக்கும்போது வழக்கறிஞராகவும் வெளியே கட்சிக்காரர்களுக்கு ஒரு நண்பராகவும் என் பணி தொடர்கிறது. சட்ட உதவி நாடுவோரின் வழக்குகளை வெற்றிகரமாக நிறைவு செய்கையில் ஏற்படும் உணர்வுக்கு ஈடில்லை,” என்றார் அவர்.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங், சட்ட உதவிக்காக விண்ணப்பித்தவர்கள் வாழ்வில் அமைப்பு ஏற்படுத்திய மாற்றங்களையும் எளியோருக்கு சட்ட உதவிகள் வழங்குவதில் அது கொண்டிருக்கும் கடப்பாட்டையும் தமது உரையில் குறிப்பிட்டார்.

“தென்கிழக்காசியாவில் சட்ட உதவித் திட்டத்தைக் கொண்ட முதல் நாடு சிங்கப்பூர். சட்ட உதவி அமைப்பு செயல்படத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை, சட்ட உதவி மற்றும் சிவில் விவரங்களுக்கான ஆலோசனைக்காகக் கிட்டத்தட்ட 420,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.

“கடந்த 66 ஆண்டுகளாக அமைப்பின் விண்ணப்பதாரர்களுக்கு உதவிய அனைவருக்கும் புகழாரம் சூட்ட விழைகிறேன். நீதி கிடைக்க வறியோருக்கு உதவிய உங்கள் அனைவரின் கடின உழைப்பிற்கும் நன்றி,” என்றார் திரு.டோங்.

இவ்விழாவில் தனித்துவமிக்க சேவை விருது, உன்னதப் பங்களிப்பு வழங்கியதற்காகச் சட்ட நிறுவனங்களுக்கான விருது, வழக்கறிஞர்களுக்கான விருதுகள் உட்பட மொத்தம் முப்பது விருதுகள் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்