தற்காப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டபின் திரு சான் சுன் சிங் முதன்முறையாகச் சீனா செல்லவிருக்கிறார்.
செப்டம்பர் 15 முதல் 18ஆம் தேதி வரையிலான தமது நான்கு நாள் பயணத்தின்போது பெய்ஜிங்கில் சீனாவின் மூத்த தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுவார்.
பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சான், 12வது பெய்ஜிங் சியாங்ஷான் கருத்தரங்கிலும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
உலகம் முழுவதுமிருந்தும் உயர்மட்ட தற்காப்பு, ராணுவ, வெளியுறவுத் துறைத் தலைவர்கள் அக்கருத்தரங்கில் கலந்துகொண்டு, பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிப்பர்.
“திரு சானின் பயணம், சிங்கப்பூர் - சீனா இடையிலான நீண்டகால, நட்பார்ந்த இருதரப்புத் தற்காப்பு உறவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது,” என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ராணுவத் தலைவர், மேஜர் ஜெனரல் கய் டெக்சியன், தற்காப்பு அமைச்சு அதிகாரிகள் ஆகியோர் திரு சானுடன் சீனா செல்வர்.
தமது பயணத்தின்போது சீன ராணுவத்தின் தேசியத் தற்காப்புப் பல்கலைக்கழகத்திற்குத் திரு சான் செல்வார் என்றும் அங்கு சீன ராணுவத்தின் உயர்நிலை, மாநில அதிகாரிகளுடனான வட்டமேசைச் சந்திப்பில் அவர் கலந்துகொள்வார் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன ராணுவத்தின் குவாங்சோ தெற்குத் தளபத்தியத்திற்கும் ஸான்ஜியாங் தெற்குக் கடற்படைத் தளபத்தியத்திற்கும் அவர் செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டது.