ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டத்தின் (Integrated Shield Plan (IP- ஐபி)) ரைடர் அம்சங்களை அரசாங்கம் மேலும் சரிப்படுத்தும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் திங்கட்கிழமை (ஜனவரி 12) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தனியார் மருத்துவக் காப்பீட்டுத் துறையைச் சுகாதார அமைச்சு அணுக்கமாக நிர்வகிக்கவோ அல்லது சந்தை நடைமுறைகளைப் பரிந்துரைக்கவோ செய்யாது என்று அவர் கூறினார்.
மாறாக, திட்டங்கள் நீடித்திருப்பதை உறுதிசெய்ய, இணைக் கட்டணம், கழிவுத் தொகை போன்ற முக்கிய அளவுகோல்களை அது நிர்ணயிக்கும்.
“கடுமையான சந்தை தோல்வி ஏற்படும்போது மட்டுமே அரசாங்கம் தலையிடும். அதனால்தான் நிலையான ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்ட ரைடர்களை ஒழுங்கமைப்பதற்காக அரசு தலையிடுகிறது,” என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து நோயாளியின் குறைந்தபட்ச கட்டணக் கழிவுத் தொகையை முழுமையாக ஈடுசெய்யும் ரைடர் அம்சங்களை நிறுத்தும் அமைச்சின் நடவடிக்கைகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பட்ட கேள்விகளுக்கு திரு ஓங் பதிலளித்துப் பேசினார்.
அதிகப்படியான பாதுகாப்பு அம்சங்கள், சுகாதார சேவைகளை அதிகமாக நுகர்வதற்கு வழிவகுக்கிறது, இது அதிக தனியார் சுகாதாரப் பராமரிப்புச் செலவுக்கு வழிவகுக்கிறது. இதனால் தனியார் மருத்துவமனைக்கான ரைடர் அம்சங்களுக்குக் கட்டணத்தை உயர்த்துகிறது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுதோறும் 17 விழுக்காடு உயர்ந்துள்ளது. இது ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டத்தின் சந்தாவைவிட இரு மடங்கு ஆகும் என்று அவர் விளக்கினார்.
சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் 100,000 பேர் காப்புறுதி ரைடர் அம்சத்தைக் கைவிடுகின்றனர் அல்லது குறைத்துக்கொள்கின்றனர். பலர் தனியார் சுகாதார சேவையிலிருந்து பொதுச் சுகாதாரச் சேவைக்கு மாறுகின்றனர். இப்போக்கு, வசதியுள்ளவர்கள் தனியார் சுகாதாரப் பராமரிப்புச் சேவையிலேயே இருந்தால் பொதுச் சுகாதார அமைப்புக்கு உதவும் என்றார் அமைச்சர்.
“ரைடர் உட்பட, தனியார் சுகாதாரக் காப்பீட்டை வாங்கும் வசதி இருக்கும்போது, அது இன்னும் அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது, ஆனால் அவர்களில் பாதிப் பேர் இன்று பொது மானியக்கட்டண பராமரிப்புக்கு மாறுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தனியார், பொது மருத்துவமனைகளுக்கு இடையிலான நோயாளிகளின் எண்ணிக்கை விகிதம் 2010ஆம் ஆண்டில் 15க்கு 85ஆக இருந்து 2020ஆம் ஆண்டில் 12க்கு 88ஆக ஆனது. இப்போது 10க்கு 90ஆக அதிகரித்துள்ளது. ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்ட ரைடரின் மாற்றங்களால் ஏற்பட்ட குறுகிய கால தாக்கத்தால் சில காப்புறுதி சந்தாதாரர்கள் தங்கள் இணைக் கட்டணத்தைக் குறைக்க பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதைக் காண முடிந்தது.
பொது மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிப்பதற்கும், மூப்படையும் மக்கள் தொகையைச் சமாளிப்பதற்கான வெளிநோயாளி திறனை அதிகரிப்பதற்கும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டம் ரைடர்களுக்கு அண்மையில் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள், தனியார் சுகாதாரப் பராமரிப்பு, காப்பீட்டை நிலையானதாக வைத்திருப்பதற்கான முயற்சிகளில் ஒன்றாகும்.
தற்போதுள்ள அதிகபட்ச பாதுகாப்பைக் கொண்ட காப்புறுதிகளுடன் ஒப்பிடும்போது புதிய ரைடர் அம்சங்களுக்கான சந்தா கிட்டத்தட்ட 30 விழுக்காடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விதிகளின் கீழ், தனியார் மருத்துவமனை ஐபி ரைடர் திட்டங்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு $600, பொது மருத்துவமனை ஐபி ரைடர்களுக்கு $200 சேமிக்க முடியும்.
ஐந்து விழுக்காடு இணைக் கட்டண உச்சவரம்பும் இரட்டிப்பாக்கப்பட்டு ஆண்டுக்கு $6,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

