ஸ்ரீ நாராயண மிஷன் (சிங்கப்பூர்) அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பத்து ஆண்டுகள் சேவையாற்றிய திரு எஸ். தேவேந்திரன், எதிர்வரும் டிசம்பர் 1ஆம் தேதி அப்பதவியிலிருந்து விலகவுள்ளார்.
சுகாதார, முதியோர் பராமரிப்புத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட திரு பெர்னி போ, அந்த அமைப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.
புதன்கிழமை (நவம்பர் 4) திரு பெர்னி போ நியமனம் செய்யப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்பார். டிசம்பர் 1ல் முழுமையாகப் பொறுப்பேற்பதற்கு முன், திரு தேவேந்திரனுடன் இணைந்து திட்டமிடப்பட்ட நிர்வாக மாற்றத்தில் கவனம் செலுத்துவார்.
ஸ்ரீ நாராயண மிஷனின் செயற்குழுவும் தலைமைத்துவ மாற்றப் பணிக்குழுவும் கடந்த சில மாதங்களாக மேற்கொண்ட விரிவான தேடலைத் தொடர்ந்து இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திரு தேவேந்திரனின் அர்ப்பணிப்புமிக்க பத்தாண்டு கால தலைமைத்துவத்திற்கு ஸ்ரீ நாராயண மிஷனின் தலைவர் அனில் சரசிஜாக்ஷன் நன்றி தெரிவித்தார்.
“ஸ்ரீ நாராயண மிஷனின் வளர்ச்சியிலும் விரிவாக்கத்திலும் திரு தேவேந்திரனின் பங்களிப்பு முக்கியப் பங்கு வகித்துள்ளது. புதிய அத்தியாயத்தை வழிநடத்தவுள்ள திரு பெர்னி போவை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். திட்டமிடப்பட்ட இந்த நிர்வாக மாற்றம், முதியவர்களுக்கும் சமூகத்திற்கும் தடையற்ற சேவையைத் தொடர்ந்து வழங்க உதவும்,” என்றார் திரு அனில்.
புதிய தலைவராகப் பொறுப்பேற்கும் திரு பெர்னி போ, சுகாதாரத் துறையில் பல அமைப்புகளுக்குத் தலைமைப் பொறுப்பு வகித்தவர். சிங்கப்பூர் அதிமூப்படைந்த சமூகமாக மாறிவரும் இக்காலகட்டத்தில், நீடித்த, மேம்பட்ட பராமரிப்புச் சேவைகளை வழங்குவதற்கு இவரது அனுபவம் பெரிதும் துணைபுரியும் என அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
1948ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்ரீ நாராயண மிஷன், ஈசூனின் சொங் பாங், ரிவர்வாக் ஆகிய இரண்டு இடங்களில் தாதிமை இல்லங்களை நடத்தி வருகிறது. இந்த அமைப்பு, 2028ஆம் ஆண்டு செஞ்சாறுவில் தனது மூன்றாவது தாதிமை இல்லத்தைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.
இதுபோக, மூன்று மூத்தோர் பராமரிப்பு மையங்கள், இரண்டு துடிப்பாக முதுமையடையும் நிலையங்கள், ‘மெராந்தி ஹோம்’ மனநல இல்லத்தையும் ஸ்ரீ நாராயண மிஷன் நிர்வகித்து வருகிறது.
