வட்ட ரயில் பாதைப் பயணிகள் இம்மாதம் 17ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 19ஆம் தேதிவரை 30 நிமிடங்கள் வரையிலான தாமதத்தை எதிர்நோக்கலாம்.
இந்தக் காலகட்டத்தில் வட்டப் பாதையில் ரயில்கள் குறைவாக இயக்கப்படவிருப்பதே அதற்குக் காரணம்.
மவுன்ட்பேட்டன், டக்கோட்டா, பாய லேபார் நிலையங்களை இணைக்கும் சுரங்கப்பாதைகளை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (ஜனவரி 8) தெரிவித்தது.
இந்த மூன்று மாதங்களில் மவுன்ட்பேட்டன், டக்கோட்டா, பாய லேபார் நிலையங்களுக்கு இடையே ஒற்றைத் தடத்தில் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை இணைப்பு ரயில்கள் இயக்கப்படும். இப்போது அந்தக் கால இடைவெளி மூன்று நிமிடங்களாக உள்ளது.
வட்டப் பாதையில் தங்கள் பயணத்தைத் தொடர விரும்பும் பயணிகள் மவுன்ட்பேட்டன் அல்லது பாய லேபாரில் இறங்கி, வேறு ரயிலுக்கு மாற வேண்டும்.
மேம்பாட்டுப் பணிகளால் பாதிக்கப்படாத ரயில் நிலையங்களுக்குப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக வார நாள்களின் உச்ச நேரங்களில் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும். ரயில் பயணத்திற்கான கட்டணமே இணைப்புப் பேருந்துச் சேவைகளுக்கும் பொருந்தும்.
பயணிகள் மாற்றுப் பயண வழிகளை அறிந்துகொள்வதற்கு ஏதுவாக ஜனவரி 5ஆம் தேதியே இந்த நடைமுறை தொடங்கிவிட்டது என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
காலை உச்ச நேரத்தின்போது, எண் 37A மற்றும் 38 கொண்ட இணைப்புப் பேருந்துச் சேவையின்கீழ் 44 பேருந்துகள் இயக்கப்படும். அதுபோல மாலை உச்ச நேரத்தின்போது 37B, 37C, 38 ஆகிய எண்களின்கீழ் 44 பேருந்துகள் இயக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து மேல்விவரங்களை ஆணையத்தின் மைடிரான்ஸ்போர்ட்.எஸ்ஜி கைப்பேசிச் செயலி மற்றும் சமூக ஊடகப் பக்கங்கள் வழியாகவும் எஸ்எம்ஆர்டி செயலி, சமூக ஊடகத் தளங்கள் வழியாகவும் அறிந்துகொள்ளலாம்.
பயணிகளுக்கு, குறிப்பாக முதியவர்கள் மற்றும் நடமாட்டச் சிக்கல் உள்ளோருக்கு உதவுவதற்காக பாதிக்கப்படும் நிலையங்களில் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர்.

