சிங்போஸ்ட் அதன் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக (chief operating officer) நியோ சு யின் என்பவரை நியமித்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அப்பொறுப்புக்கு திருவாட்டி நியோ நியமிக்கப்பட்டிருப்பதாக சிங்போஸ்ட் வியாழக்கிழமையன்று (ஜனவரி 2) அறிவித்தது. சிங்போஸ்டில் இடம்பெற்றதாக நம்பப்படும் தவறான நடத்தை அம்பலமான பிறகு சர்ச்சை தலைதூக்கியது. அதனைத் தொடர்ந்து நிர்வாகக் குழுவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அதன் மூத்த நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மூவரைப் பதவி நீக்கம் செய்த பிறகு சிங்போஸ்ட் நிர்வாகக் குழுவில் மாற்றங்கள் செய்யப்பட்டன. தவறான ஊழியர் நடத்தை தொடர்பில் அம்பலமான தகவல்களை அந்த மூவர் சரியாகக் கையாளவில்லை என்றும் கூறப்பட்டது.
குழுமத் தலைமை நிர்வாகி வின்சென்ட் பாங், குழும நிதி அதிகாரி வின்சென்ட் யிக், சிங்போஸ்டின் அனைத்துலக வர்த்தகப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி லி யு ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள். மூவரும் தாங்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வருகின்றனர்.
புதிய தலைமை நிர்வாக அதிகாரியை சிங்போஸ்ட் இன்னும் நியமிக்கவில்லை. அதேவேளை, சிங்போஸ்டின் ஆஸ்திரேலியச் செயல்பாட்டுப் பிரிவின் முன்னாள் நிதி விவகாரத் தலைவர் ஐசாக் மா, இவ்வாரத் தொடக்கத்தில் அதன் குழும நிதி நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
44 வயது நியோ, சிங்போஸ்டின் உள்ளூர், அனைத்துலகப் பிரிவுகளையும் சொத்துகளையும் கவனித்துக்கொள்வார்.