ஒரே ஆண்டில் எழுபது மில்லியன் பயணிகளைக் கையாண்ட சாங்கி விமான நிலையம்

3 mins read
ae204563-6c9a-47bb-92b1-747c47458250
விமான நிலைய வடிவமைப்பை பார்வையிட்ட தற்காலிக போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ். உடன் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் உள்ளார். - படம்: பெரித்தா ஹரியான்

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம், 2025ஆம் ஆண்டில் 70 மில்லியன் பயணிகளைக் கையாண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலையையும் பயணிகளின் எண்ணிக்கை தாண்டிவிட்டதாக தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் திங்கட்கிழமை (ஜனவரி 5) தெரிவித்தார்.

இதற்கு முன்பு 2019ல் 68.3 மில்லியன் பயணிகள் சிங்கப்பூர் வழியாகப் பயணம் செய்துள்ளனர்.

அதன் பிறகு 2024ஆம் ஆண்டில் சாங்கி விமானநிலையம் கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 67.7 மில்லியனாகும். தற்போது 70 மில்லியன் பயணிகளை சாங்கி நிலையம் கையாண்டுள்ளது.

“கொவிட் கொள்ளைநோய்க்குப் பிறகு உலகளாவிய விமானத் துறை வலுவாக மீட்சியடையும் என்று சிங்கப்பூர் நம்பியது. சிங்கப்பூர் அரசாங்கமும் 5வது முனையத்தைக் கட்டும் சரியான முடிவை எடுத்திருந்தது,” என்று எதிர்கால மெகா முனையத்தின் புதிய கண்காட்சியைத் தொடங்கிவைத்து திரு சியாவ் குறிப்பிட்டார்.

அடுத்த சில வாரங்களில் முனையம் 5ன் தரைக்கு மேல் கட்டப்படும் பகுதிக்கான ஒப்பந்தக் குத்தகையை சாங்கி விமான நிலையக் குழுமம் வெளியிடும் என்றார் அவர்.

5வது முனையம் கட்டும் முடிவைப் பற்றி பேசிய அமைச்சர், சிங்கப்பூரின் எதிர்காலத்தில் அரசாங்கம் வைத்திருந்த நம்பிக்கையை அது காட்டுவதாகக் கூறினார்.

போட்டித்திறன்மிக்க உலகில் சிங்கப்பூரின் நிலையைக் கட்டிக்காப்பது அதன் நோக்கமாகும்.

விமானத் துறையின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இதனால் ஐந்தாவது முனையம் கட்டுவது குறித்து ஆழமாகப் பரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. பின்னர் அந்த முனையத்தைக் கட்டலாம் என்ற முடிவை அரசாங்கம் எடுத்தது.

தற்போது விமானத் துறையின் வளர்ச்சி பிரகாசமாக உள்ளது. உலகளாவிய போக்குவரத்து 2050ஆம் ஆண்டில் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சியில் ஆசிய-பசிபிக் வட்டாரம் முன்னிலை வகிக்கவிருக்கிறது.

சிங்கப்பூரின் எதிர்கால விமானத் துறை வளர்ச்சியை முனையம் 5 பிரதிபலிக்கிறது.

தானியக்க முறைகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைக் கொண்டு வலுவான தொழில்நுட்பத்துடன் முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, பயணப்பெட்டிகளையும் சரக்குகளையும் கையாள தானியக்க வாகனங்கள், இயந்திர மனிதர்கள் பயன்படுத்தப்படும்.

விமானங்களை திட்டமிடவும் பயணிகளின் சேவைகளை மேம்படுத்தவும், பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் விமானங்களை இயக்குவதில் ஏற்படும் இடையூறுகளை உடனடியாகச் சரி செய்யவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் சியாவ் தெரிவித்தார்.

புதிய மிகப் பெரிய முனையம், 2030ஆம் ஆண்டின் மத்தியில் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது, நீடித்த நிலைத்தன்மைக்கு சான்றாகவும் இருக்கும்.

இயற்கையை அதிகம் பாதிக்காத எரிபொருளையும் மின்சாரத்தையும் புதிய முனையத்தில் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.

பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயணிகள், விமான நிறுவனங்கள், விமான நிலைய வாடகைதாரர்களின் யோசனைகளை அறிந்து சில்லறைக் கடைகளுக்கான இடங்கள், பயணிகள் தங்குமிடங்கள் போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, குடிநுழைவு சோதனையிலிருந்து விமான ஏறும் வரை தங்குத் தடையின்றி பயணிகள் செல்ல முடியும். அவ்வழியில் அவர்களுக்கு ஏற்ற உணவு வகைகள், சில்லறை விற்பனைக் கடைகள் பரிந்துரைக்கப்படும்.

முனையம் 5 மிகப்பெரிய விமான நிலையமாக இருந்தாலும் பயணிகள் நடக்கும் தொலைவு குறைவாகவே இருக்கும் என்று அமைச்சர் சியாவ் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்