சாங்கி விமான நிலையம் கையாண்ட பயணிகள் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 69.98 மில்லியனாகப் பதிவானது.
அப்பயணிகளில் சீனா, இந்தோனீசியா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம்.
இந்தத் தகவலைச் சாங்கி விமான நிலையக் குழுமம் வியாழக்கிழமை (ஜனவரி 22) வெளியிட்டது.
இதற்கு முன்பு, 2019ஆம் ஆண்டில் ஆக அதிகமான பயணிகள் எண்ணிக்கை பதிவானது.
அவ்வாண்டில் 68.3 மில்லியன் பயணிகளைச் சாங்கி விமான நிலையம் கையாண்டது.
ஆனால், அதனைத் தொடர்ந்து கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக விமானப் போக்குவரத்தும் உலகளாவிய நிலையில் விமானப் பயணங்களும் முடங்கின.
2024ஆம் ஆண்டைக் காட்டிலும் 2025ஆம் ஆண்டில் சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து 3.4 விழுக்காடு அதிகமாக இருந்தது.
2024ஆம் ஆண்டில் 67.7 மில்லியன் பயணிகளை அது கையாண்டது.
தொடர்புடைய செய்திகள்
2025ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, டிசம்பர் மாதத்தில் ஆக அதிகமான பயணிகளைச் சாங்கி விமான நிலையம் கையாண்டது. டிசம்பர் மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை 6.3 மில்லியனாகப் பதிவானது.
பயணிகள் நடமாட்டம் ஆக அதிகமாக இருந்த நாள் டிசம்பர் 20.
இது கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய சனிக்கிழமை ஆகும்.
அன்று 223,000க்கும் மேற்பட்ட பயணிகளைச் சாங்கி விமான நிலையம் கையாண்டது.
2025ஆம் ஆண்டில் சாங்கி விமான நிலையம் கையாண்ட பயணிகளில் ஆக அதிகமானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
அவர்களை அடுத்து, இந்தோனீசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அதிக எண்ணிக்கையில் சாங்கி விமான நிலையத்திற்கு வந்துசென்றனர்.

