சாங்கி விமான நிலையம் 2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் 17.2 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது. 2024ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் பதிவான எண்ணிக்கையை விட இது 4.3 விழுக்காடு அதிகம்.
கொவிட்-19 தொற்றுநோய் பரவலுக்கு முன்னர், 2019 முதல் காலாண்டில் இருந்ததைவிட 2025 முதல் காலாண்டில் பயணிகள் போக்குவரத்து 4.8 விழுக்காடு அதிகமாக இருந்தது.
ரிட்ஸ்-கார்ல்டன், மில்லினியா சிங்கப்பூர் ஹோட்டலில் வியாழக்கிழமை (ஏப்ரல் 24 ) நடைபெற்ற சாங்கி விமான நிலையக் குழுமத்தின் வருடாந்திர சாங்கி விமான விருது நிகழ்ச்சியில் அண்மைய புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன.
சாங்கி விமான நிலையத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட 2025 பயணிகள் போக்குவரத்து புள்ளிவிவரங்களின்படி, விமான நிலையம் ஜனவரியில் 6.16 மில்லியன் பயணிகள் போக்குவரத்தையும், பிப்ரவரியில் மேலும் 5.44 மில்லியன் பயணிகள் போக்குவரத்தையும் கையாண்டது.
மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 5.6 மில்லியன் பயணிகள் சாங்கி விமான நிலையம் வழியாகச் சென்றனர்.
2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பயணிகள் போக்குவரத்தால் சீனா, சாங்கி விமான நிலையத்தின் மிகப்பெரிய சந்தையாக இருந்தது. அடுத்தடுத்த இடங்களில் இந்தோனீசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து ஆகியவை உள்ளன என்று சாங்கி விமான நிலையக் குழுமம் குறிப்பிட்டது.
2024 மார்ச் முதல் 2025 மார்ச் வரையிலான விமான நிலையத்தின் 12 மாத பயணிகள் போக்குவரத்து, இதுவரை இல்லாத அளவுக்கு 68.4 மில்லியனை எட்டி, முதல் முறையாக தொற்றுநோய்க்கு முந்தைய அளவை விஞ்சியுள்ளது என்று சாங்கி விமான நிலையக் குழுமத்தின் ஏர் ஹப், சரக்கு மேம்பாட்டுப் பிரிவு நிர்வாக துணைத் தலைவர் திரு லிம் சிங் கியாட் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இது விமானப் பயணத்தின் நேர்மறையான போக்குகளை பிரதிபலிப்பதாகக் கூறிய அவர், சாங்கி விமான நிலையக் குழுமம் அனைத்து வட்டாரங்களிலும் முக்கிய சந்தைகளிலும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது எனக் குறிப்பிட்டார்.
2025ன் முதல் காலாண்டில் சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையேயான போக்குவரத்து ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 10% அதிகரித்துள்ள வேளையில், ஜப்பானுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான போக்குவரத்து 16% கூடியுள்ளது.
2025ன் முதல் மூன்று மாதங்களில் விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய வட்டாரமாக வட அமெரிக்கா விளங்குகிறது. 2024ன் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் போக்குவரத்து 15.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சாங்கி விமான நிலையம் 2024ல் 67.7 மில்லியன் பயணிகளைக் கையாண்டது. இது 2019ல் கையாளப்பட்ட 68.3 மில்லியன் பயணிகளில் 99.1 விழுக்காடு.
2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், சாங்கி விமான நிலையம் புதிய நகரங்களுடன் இணைக்கப்பட்டது. அதில் சீனாவின் ஹார்பின், இந்தோனீசியாவின் லாபுவான் பாஜோ, மலேசியாவின் சுபாங் விமான நிலையம் ஆகியவை அடங்கும்.
ஏப்ரல் 1 நிலவரப்படி, ஏறக்குறைய 100 விமான நிறுவனங்கள் சாங்கி விமான நிலையத்தில் 7,200க்கும் மேற்பட்ட வாராந்திர திட்டமிடப்பட்ட விமானச் சேவைகளை இயக்கி வருகின்றன. இது சிங்கப்பூரை உலகெங்கிலும் உள்ள 49 நாடுகள், வட்டாரங்களின் ஏறக்குறைய 170 நகரங்களுடன் இணைக்கிறது.

