மேம்படுத்தப்படவுள்ள சாங்கி விமான நிலைய மூன்றாம் முனையம்

மேம்படுத்தப்படவுள்ள சாங்கி விமான நிலைய மூன்றாம் முனையம்

2 mins read
e8b41d57-d2cf-404a-b1f4-826be1afe3c8
மேம்பாட்டுப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி இவ்வாண்டு பிற்பகுதியில் கோரப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையம் பெரிய அளவில் மேம்படுத்தப்படவுள்ளது.

அதற்கான ஒப்பந்தப்புள்ளிகளுக்கு இவ்வாண்டு பிற்பாதியில் அழைப்பு விடுக்கப்படும் என்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்துள்ளார். பயணிகள் சொந்தமாகப் பயணப் பதிவுசெய்துகொள்ளுதல், பாதுகாப்புச் சோதனை, கழிவறைகளைச் சுத்தம் செய்தல் ஆகிய நடவடிக்கைகளுக்காக மூன்றாம் முனையத்தில் கூடுதல் மின்னிலக்க, இயந்திரவியல் தொழில்நுட்ப அம்சங்கள் சேர்க்கப்படும் என்று திரு சியாவ் கூறினார்.

ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் ‘சாங்கி ஏர்லைன் விருது’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது திரு சியாவ் இத்தகவல்களைத் தெரிவித்தார். விருது நிகழ்ச்சி ‌ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது.

மூன்றாம் முனையத்தில் சேர்க்கப்படவுள்ள சில புதிய அம்சங்களை வருங்காலத்தில் ஐந்தாம் முனையம் செயல்படத் தொடங்கிய பிறகு விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், புதிய அம்சங்களை மூன்றாம் முனையத்தில் சேர்ப்பது விரிவாக்கத்துக்கான ‘சோதனை’ கட்டம் என்று திரு சியாவ் குறிப்பிட்டார்.

தற்போது கட்டப்பட்டுவரும் ஐந்தாம் முனையம், 2030களின் நடுப்பகுதியில் செயல்படத் தொடங்கும்.

மூன்றாம் முனையம் கையாளக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே மேம்பாட்டுப் பணிகளின் முக்கிய இலக்கு என்று திரு சியாவ் தெரிவித்தார். குறிப்பாக, உச்சநேரத்துக்கு இது பொருந்தும்.

சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையம் 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது.

மேம்பாட்டுப் பணிகள் பெரும்பாலும் ஐந்தாம் முனையம் திறக்கப்படுவதற்கு முன்பு இடம்பெறவுள்ள கடைசி மேம்பாட்டுப் பணிகளாக இருக்கலாம் என்றும் திரு சியாவ் சொன்னார். இப்போதுமுதல் ஐந்தாம் முனையம் திறக்கப்படும் வரை வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆண்டுதோறும் சாங்கி விமான நிலையத்தில் 90 மில்லியன் பயணிகள்வரை கையாள முடியும். ஐந்தாம் முனையத்தின் மூலம் அந்த எண்ணிக்கை 55 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்து ஏறக்குறைய 140 மில்லியனாகப் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது செயல்பாட்டில் இருக்கும் நான்கு முனையங்களை மேம்படுத்த மூன்று பில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சாங்கி விமான நிலையக் குழுமம் 2024ஆம் ஆண்டு அறிவித்தது. மூன்றாம் முனையத்துக்கான மேம்பாட்டுப் பணிகள் அதில் அங்கம் வகிக்கிறது.

குறிப்புச் சொற்கள்