இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் சாங்கி விமான நிலையம் வழியாக 16.8 மில்லியன் பேர் பயணம் செய்தனர்.
இது, முந்திய 2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டைவிட 10 விழுக்காடு அதிகம்.
கொவிட்-19 தொற்றுப் பரவலுக்குமுன், 2019 மூன்றாம் காலாண்டில் பதிவான எண்ணிக்கையில் இது 97.4 விழுக்காடு என்றும் சாங்கி விமான நிலையக் குழுமம் புதன்கிழமையன்று (அக்டோபர் 23) தெரிவித்தது.
மேலும், 2024 ஜூலை - செப்டம்பர் காலகட்டத்தில் சாங்கி விமான நிலையம் வழியாக 92,100 விமானங்கள் இயக்கப்பட்டன என்றும் இது கடந்த ஆண்டின் அதே காலகட்டத்தைவிட 7.5 விழுக்காடு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
2024 மூன்றாம் காலாண்டில் சாங்கி விமான நிலையம் கையாண்ட பயணிகள் போக்குவரத்தில் வடக்கு ஆசிய வட்டாரம் 27 விழுக்காட்டுடன் முதலிடம் பிடித்தது. இது, முந்திய ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டு வளர்ச்சி எனத் தெரிவிக்கப்பட்டது.
சாங்கி விமான நிலையப் பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தமட்டில், சீனா, இந்தோனீசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து ஆகிய நாடுகளே முன்னிலையில் இருந்தன.
சிங்கப்பூருக்கும் சீனாவிற்கும் இடையே விமானப் பயணிகள் போக்குவரத்து தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது. ஆண்டு அடிப்படையில் அது 50 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
இதனிடையே, கடந்த காலாண்டில் ஹாங்காங், ஜப்பான் நாடுகளிலிருந்து வந்தவர்களின் எண்ணிக்கையும் 2023 மூன்றாம் காலாண்டில் பதிவானதைவிட 20 விழுக்காட்டிற்குமேல் உயர்வு கண்டதாக சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.
2024 மூன்றாம் காலாண்டில், ஷாங்காய் - சிங்கப்பூர் இடையிலான விமானப் பயணிகள் போக்குவரத்து வலுவான வளர்ச்சி கண்டது. ஓராண்டிற்குமுன் பதிவானதைவிட அது இருமடங்கிற்குமேல் வளர்ச்சி அடைந்தது.
ஹாங்காங், கோலாலம்பூர், லண்டன், மெல்பர்ன், தோக்கியோ ஆகியவை மூன்றாம் காலாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சி பதிவான முதல் 10 நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
சரக்கு விமானப் போக்குவரத்தைப் பொறுத்தமட்டில், 2024 ஜூலை - செப்டம்பர் மாதங்களில் 512,000 டன் சரக்குகளை சாங்கி விமான நிலையம் கையாண்டுள்ளாது. இது, அதற்கு முந்திய ஆண்டின் மூன்றாம் காலாண்டைவிட 13.5 விழுக்காடு அதிகம்.
ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், இந்தியா, அமெரிக்கா ஆகியவை சரக்கு விமானப் போக்குவரத்திற்கான முக்கியச் சந்தைகளாகத் திகழ்ந்தன.
2024 அக்டோபர் 1 நிலவரப்படி, 96 விமான நிறுவனங்கள் வாரந்தோறும் 7,000க்கும் அதிகமான விமானங்களை சாங்கி விமான நிலையம் வழியாக இயக்கி வருகின்றன.