தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாங்கி ஐந்தாம் முனையம் சிங்கப்பூரர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும்: பிரதமர் வோங்

4 mins read
22e57ab5-f31f-4a44-8719-9db3bb913a60
சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனைய மாதிரியைப் பார்வையிடும் பிரதமர் லாரன்ஸ் வோங் (நடுவில்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சாங்கி விமான நிலையம் சிறிய நாடான சிங்கப்பூரை உலக அளவில் பல நாடுகளுடன் இணைத்துள்ளது என்றும் அந்த இணைப்பு சுற்றுலா, தளவாடங்கள், விண்வெளித் துறை போன்ற அம்சங்களில் சிங்கப்பூரின் வளர்ச்சிக்குக் கைகொடுத்துள்ளது என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

இந்த விமானத்துறைச் சூழலியல் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஐந்து விழுக்காடு பங்களிப்பதாகச் சொன்ன பிரதமர் வோங், சாங்கி விமான நிலையம் உலக அளவில் சிங்கப்பூரைப் பிரதிநிதிப்பதாகவும் கூறினார்.

புதன்கிழமை (மே 14) சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனைய நில அகழ்வு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திரு வோங் உரையாற்றினார்.

ஐந்தாம் முனையக் கட்டுமானப் பணிகள் இடம்பெறும் சாங்கி ஈஸ்ட் மேம்பாட்டு இடத்தில் இடம்பெற்ற நில அகழ்வு விழாவில் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட்டும் கலந்துகொண்டார்.

ஐந்தாம் முனையம் 2030களின் மத்தியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க வரி விதிப்பு போன்ற காரணங்களால் உலகப் பொருளியல் நிலப்பரப்பு நிச்சயமற்றதாக இருப்பதாகக் குறிப்பிட்ட நிதி அமைச்சருமான திரு வோங், சிங்கப்பூர் போன்ற சிறிய பொருளியல் கொண்ட நாடுகள் அதனால் பாதிக்கப்படும் என்று எச்சரித்தார்.

உலகத்துடன் சிங்கப்பூர் தொடர்ந்து இணைந்திருக்க சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையம் வழியமைக்கும் என்று கூறிய அவர், அப்போதுதான் விமானத்துறை போட்டித்தன்மைமிக்கதாக விளங்க முடியும் என்று வலியுறுத்தினார்.

ஐந்தாம் முனையம் தொடர்பான திட்டமிடல் சிறிது காலமாகவே நடந்துவருவதாகச் சொன்ன பிரதமர் வோங், விமானப் பயணத் துறை நீண்ட காலத்திற்கு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்றும் வளர்ச்சியின் பெரும்பகுதி ஆசிய பசிபிக் வட்டாரத்தில் நடைபெறும் என்றும் கூறினார்.

கொவிட்-19 கிருமிப் பரவல் காலத்தில் ஐந்தாம் முனையத்தின் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தமது உரையில் குறிப்பிட்ட திரு வோங், இனி அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என்றார்.

செயல்திறன் அதிகரிப்பு

தற்போது செயல்படும் அனைத்து முனையங்களையும் ஒன்றாகச் சேர்த்தால் நிலப்பரப்பின் அடிப்படையில் ஐந்தாம் முனையம் அதைவிடப் பெரிது என்று கூறிய பிரதமர், ஐந்தாம் முனையம் மூலம் சாங்கி விமான நிலையத்தின் தற்போதைய செயல்திறனை 50 விழுக்காட்டுக்குமேல் விரிவுபடுத்த முடியும் என்றார்.

ஐந்தாம் முனையத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி விளக்கிய பிரதமர் வோங், அதில் கூடுதலான விமானச் சேவைகளை எதிர்பார்க்கலாம் என்றும் ஒவ்வோர் ஆண்டும் கூடுதலாக 50 மில்லியன் பயணிகளை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.

தற்போது சாங்கி விமான நிலையத்திலிருந்து உலகமெங்கும் 170 நகரங்களுக்குச் செல்லலாம் என்றும் ஐந்தாம் முனையம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் 200க்கும் மேற்பட்ட நகரங்களுக்குச் செல்லலாம் என்றும் திரு வோங் சொன்னார்.

அளவில் பெரியதாக இருப்பதோடு ஐந்தாம் முனையம் ஓர் அறிவார்ந்த முனையமாகவும் செயல்படும் என்ற திரு வோங், பயணப்பை செயல்பாட்டு முறைகள் தானியக்க முறையில் இருக்கும் என்றும் பயணிகளின் அனுபவங்களை மெருகூட்ட அறிவார்ந்த செயல்பாடுகள் பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.

சாங்கி ஈஸ்ட் மேம்பாட்டுத் திட்டத்தின் ஓர் அங்கம்

விமான நிலையத்திற்கு அப்பாற்பட்டு ஐந்தாம் முனையம் சாங்கி ஈஸ்ட் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் என்று திரு வோங் தெரிவித்தார்.

“சாங்கி ஈஸ்ட் மேம்பாட்டுத் திட்டம் சாங்கி ஈஸ்ட் தொழிலியல் வட்டாரம், சாங்கி ஈஸ்ட் நகர்ப்புற வட்டாரம் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை சிங்கப்பூரின் ஆகாயவழிச் சரக்குகளைக் கையாளும் திறனைக் கணிசமாக அதிகரிக்கும். இது சிங்கப்பூரர்களுக்கு மேலும் பல வேலை வாய்ப்புகளை, குறிப்பாக இயந்திரவியல், தரவு அறிவியல், நீடித்த நிலைத்தன்மை ஆகிய அம்சங்களில் அதிகரிக்கும்,” என்றும் பிரதமர் வோங் கூறினார்.

நீடித்த நிலைத்தன்மை அம்சங்கள், இணைப்புத்திறன்

ஐந்தாம் முனையத்தில் நீடித்த நிலைத்தன்மை அம்சங்களும் அடங்கியுள்ளதாகச் சொன்ன திரு வோங், தூய எரிசக்தி பயன்படுத்தப்படும் என்றும் சூரியவொளித் தகடு பொருத்துவது குறித்துப் பரிசீலிக்கப்படுகிறது என்றும் சொன்னார்.

ஐந்தாம் முனையத்தின் அளவு பெரிது என்பதால் அது சிங்கப்பூரின் மிகப்பெரிய கூரை அமைப்பாக விளங்கும் என்றும் பிரதமர் வோங் கூறினார்.

ஐந்தாம் முனையத்தின் இணைப்புத்திறன் குறித்துப் பேசிய பிரதமர் வோங் பயணிகள் நடந்து செல்லும் தொலைவைக் குறைக்கும் விதமாகத் தானியக்கச் சேவைகள் அமல்படுத்தப்படும் என்றார்.

சாங்கி விமான நிலையத்தைச் சிங்கப்பூரின் இதர பகுதிகளுடன் சிறப்பாக இணைக்க வாகனம், வாடகை உந்துவண்டி, பேருந்து, பெருவிரைவு ரயில் சேவைகள் நடப்பில் இருக்கும் என்றும் பிரதமர் வோங் தெரிவித்தார்.

பயணிகளை ஐந்தாம் முனையத்திலிருந்து நேரடியாக நகரத்துக்கு அழைத்துச் செல்ல தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை விரிவாக்கம் செய்யப்படும் என்ற திரு வோங் குறுக்குத் தீவு ரயில் பாதையின் விரிவாக்கம் குறித்தும் பரிசீலித்து வருவதாகச் சொன்னார்.

மேலும், தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை ஐந்தாம் முனையத்தைச் சிங்கப்பூர் - ஜோகூர் விரைவு ரயில் கட்டமைப்புடனும் இணைக்கும் என்றும் குறிப்பிட்டார் திரு வோங்.

ஐந்தாம் முனையம் தானா மேரா படகு முனையத்துக்கு அருகில் இருப்பதால் அண்டை நாடுகளில் உள்ள இடங்களுக்குச் செல்லத் தடையற்ற வான்வழி, கடல் போக்குவரத்துச் சேவைகளைக் குறித்தும் பரிசீலித்து வருவதாகச் சொன்னார் பிரதமர் வோங்.

குறிப்புச் சொற்கள்