2026 முதல் காலாண்டில் 17.6 மி. பயணிகளைக் கையாண்ட சாங்கி

2026 முதல் காலாண்டில் 17.6 மி. பயணிகளைக் கையாண்ட சாங்கி

2 mins read
மார்ச் மாதம் சிங்கப்பூர்-மத்திய கிழக்குப் பயணங்கள் சரிவு
59c2f4bc-3b7c-4ed5-95e4-7a49c62f5254
சாங்கி விமான நிலையம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸூ

இவ்வாண்டு முதல் காலாண்டில் கிட்டத்தட்ட 17.6 மில்லியன் பயணிகள் சாங்கி விமான நிலையத்துக்கு வந்து சென்றனர்.

இந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டு முதல் காலாண்டில் பதிவானதுடன் ஒப்பிடுகையில் 2.3 விழுக்காடு அதிகமாகும்.

மத்திய கிழக்குப் பூசலால் பாதிப்பு

ஈரான் போர் காரணமாக சிங்கப்பூருக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான பயணங்கள் குறைந்துள்ளபோதும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாண்டு மார்ச் மாதம் வரையிலான 12 மாதகாலத்தில் சாங்கி விமான நிலையம் கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் 2.9 விழுக்காடு அதிகரித்து 70.4 மில்லியனாகப் பதிவானது. 12 மாதகாலத்தில் எண்ணிக்கை இதுவரை அவ்வளவு அதிகமாகப் பதிவானதில்லை.

மத்திய கிழக்குப் பூசல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் சிங்கப்பூருக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான பயணங்கள் ஆண்டு அடிப்படையில் 80 விழுக்காடு சரிந்தன. சாங்கி விமான நிலையக் குழுமம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

நிலைமையைச் சமாளிக்க விமான நிறுவனங்கள், சிங்கப்பூரிலிருந்து ஃபிராங்க்ஃபர்ட், லண்டன், மியூனிக், மஸ்கட், பாரிஸ், பெர்த், சிட்னி போன்ற நகரங்களுக்குக் கூடுதலாக சுமார் 90 விமானச் சேவைகளை வழங்கத் தொடங்கின.

ஜனவரியிலிருந்து மார்ச்சுக்கு இடைப்பட்ட காலத்தில் புறப்படுதல், தரையிறங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய விமானப் போக்குவரத்தின் எண்ணிக்கை 95,300ஆகப் பதிவானது. அந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவானதுடன் ஒப்பிடுகையில் 1.4 விழுக்காடு அதிகமாகும்.

அதிக விமானப் போக்குவரத்து இருந்த பகுதிகள்

வட ஆசியா, ஐரோப்பா ஆகிய வட்டாரங்களுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே விமானப் போக்குவரத்து அதிகமாக இருந்தது, இவ்வாண்டு முதல் காலாண்டில் விமானச் சேவைகளுக்கான தேவை வலுவாக இருக்க வகைசெய்தது என்று சாங்கி விமான நிலையக் குழுமத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சீனா, இந்தோனீசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவற்றுக்கும் சிங்கப்பூருக்கும் இடையேதான் 2026ஆம் ஆண்டு முதல் காலாண்டில் ஆக அதிகமான பயணிகள் விமானப் போக்குவரத்து இருந்தது.

முதல் காலாண்டில் கோலாலம்பூர், பேங்காக், ஜகார்த்தா, தோக்கியோ, ஹாங்காங் ஆகிய நகரங்களுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே அதிகமான விமானப் போக்குவரத்து இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்