ஈரானியப் போர்ச் சூழலில் சிங்கப்பூரர்களை மீட்ட நெகிழ்ச்சியான அனுபவம்

மீட்புப் பணியில் குழு ஒற்றுமையின் முக்கியத்துவம்

ஈரானியப் போர்ச் சூழலில் சிங்கப்பூரர்களை மீட்ட நெகிழ்ச்சியான அனுபவம்

2 mins read
630ac277-e620-471b-aa8c-a1fec0e435d0
மார்ச் 11ஆம் தேதி, சிங்கப்பூர் ஆகாயப்படையின் A330 பன்னோக்கு எரிபொருள் நிரப்பும் போக்குவரத்து விமானத்தில், ரியாத்தில் இருந்து சிங்கப்பூரர்கள் அழைத்து வரப்பட்டனர். - படம்: தற்காப்பு அமைச்சு
multi-img1 of 2

ஈரான் போரால் மத்திய கிழக்கில் சிக்கித்தவித்த சிங்கப்பூரர்கள் மார்ச் 10, 13ஆம் தேதிகளில் வீடு திரும்பியது அனைவரையும் நெகிழ வைத்தது என்றால் அது மிகையில்லை.

சிங்கப்பூர் ஆகாயப் படையின் ஏ330 வகை விமானங்கள் அவர்களை அழைத்துவர அனுப்பப்பட்டன.

மீட்புப் பணியின் வெற்றிக்கு முழுக் காரணம் குழு ஒற்றுமைதான் என்றார் ஆகாயப் படையின் தளவாட ஆதரவுத் திட்ட அதிகாரி தமிழ்ச்செல்வன் பழனிச்சாமி, 54.

மத்திய கிழக்கிலிருந்து சிங்கப்பூரர்களை மீட்டது பற்றிய செய்தியாளர் கூட்டம் சாங்கி ஆகாயப்படைத் தளத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) நடைபெற்றது.

அதில் ஐந்தாம் நிலை ராணுவ நிபுணர் தமிழ்ச்செல்வன் தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“மீட்பு விமானப் பயணத்திற்கான தளவாடங்களைக் கையாள்வது எனக்கு இதுவே முதல் முறை,” என்றார் அவர்.

சாதாரணப் பயணிகள் செல்லும் விமானங்களைப் போலல்லாமல் நாடு திரும்புவோருக்கு உணவு வழங்குவது, தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்குமான வசதிகளை உறுதிசெய்வது போன்ற சவால்களை எதிர்கொண்டதையும் திரு தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டினார்.

“திட்டத்தை ஒருங்கிணைக்க எங்களுக்கு 48 மணி நேரம் மட்டுமே இருந்தது,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.

மீட்புக் குழுவினருக்கு அங்கு நிலவிய நிச்சயமற்ற சூழல் மற்றொரு சவாலாக இருந்தது.

“பயணிகளின் எண்ணிக்கை, உபகரணங்கள் பற்றிய தகவல்கள் எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை,” என்றார் திரு தமிழ்ச்செல்வன்.

வேலைகள் தடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்ய அவர் ரியாத், ஜெட்டா உள்ளிட்ட நகரங்களில் உள்ள பல்வேறு அதிகாரிகளுடன் தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் அதிக அளவில் தகவல் பரிமாறினார்.

உள்துறை அமைச்சு, சாங்கி விமான நிலையம், சிங்கப்பூர்ப் பொது விமானப் போக்குவரத்து ஆணையம், ‘சேட்ஸ்’ போன்ற அமைப்புகள் ஆகாயப்படையுடன் மீட்புப் பணியில் கைகோத்தன.

ஆகாயப்படையின் இரண்டு A330 வகை விமானங்களில் மார்ச் 11ஆம் தேதி காலை 218 சிங்கப்பூரர்களும் அவர்களைச் சார்ந்தோரும் இங்கு வந்துசேர்ந்தனர். அதனைத் தொடர்ந்து மார்ச் 13ஆம் தேதி மேலும் 81 பேர் நாடு திரும்பினர்.

அவர்களை அழைத்துவரப் பயன்படுத்தப்பட்ட விமானமொன்றையும் செய்தியாளர்கள் பார்வையிட்டனர்.

விமானங்கள் தளத்திற்குத் திரும்பியபோது மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகக் கூறிய திரு தமிழ்ச்செல்வன், “எல்லாவற்றிற்கும் மேலாக, மீட்புப் பணியை நாம் வெற்றிகரமாகச் செய்துமுடித்தோம் என்ற பெருமிதம் ஏற்படுகிறது,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்