தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈசூனில் அமையும் புதிய குடியிருப்புப் பகுதியில் பல வசதிகள்

3 mins read
481f126f-fa24-4592-a3e8-732cbf631c55
2040க்குள், ஈசூன் அவென்யூ 1, 2 மற்றும் செம்பவாங் ரோடு எல்லைக்குட்பட்ட 70 ஹெக்டேர் பகுதியில் 10,000 வீடுகள் கட்டப்படும். - படம்: வீவக

ஈசூன் அவென்யூ 1, 2 மற்றும் செம்பவாங் ரோடு எல்லைக்குட்பட்ட பகுதியில் அமையும் சென்சாரு வட்டாரம், உணவங்காடி நிலையம், பேருந்து நிலையம், கடைகள், குடியிருப்புகள் ஆகியவை அடங்கிய ஒருங்கிணைந்த மேம்பாட்டு வசதியைக் கொண்டிருக்கும்.

பல்வேறு வயதுப் பிரிவுகளில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு சேவையாற்ற கல்வி நிலையம், தாதிமை இல்லம் உள்ளிட்டவை திட்டமிடப்பட்டுள்ள மற்ற புதிய வசதிகளில் அடங்கும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) புதன்கிழமை (ஜூன் 12) தெரிவித்தது.

சென்சாரு 1900களில் தோட்டங்கள், பண்ணைகளால் ஆனது.பின்னர் பொழுதுபோக்கு, வணிக பயன்பாடுகளுக்காக அது மறுசீரமைக்கப்பட்டது. இது தாவர நாற்றங்கால், முன்னாள் ‘போத்தல் ட்ரீ’ பூங்கா ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இது பின்னர் ஓர்ட்டோ பொழுதுபோக்குப் பூங்காவாக மாறியது. நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் 2019 பெருந்திட்டத்தின்படி, குடியிருப்புப் பயன்பாட்டிற்காக இப்பகுதி அடையாளம் காணப்பட்டது.

இந்த 70 ஹெக்டர் நிலப்பரளவு கொண்ட பகுதியில் 2040க்குள் ஏறத்தாழ 10,000 வீடுகள் கட்டப்படும். அவற்றில் குறைந்தது 80 விழுக்காடு பொது வீடுகளாக இருக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ மார்ச் மாதம் அறிவித்திருந்தார்.

சென்சாருவில் உள்ள முதல் தேவைக்கேற்ப கட்டப்படும் வீட்டுத் திட்டம் (பிடிஓ), ஜூன் இறுதிக்குள் தொடங்கப்படும் என்று வீவக தெரிவித்தது. அதில் மொத்தம் 1,270 ஈரறை ஃபிளெக்சி, மூவறை, நாலறை, ஐந்தறை வீடுகள் இடம்பெறும். இத்திட்டங்களில் எஞ்சிய பகுதிகளை வரும் ஆண்டுகளில் வீவக கட்டங்கட்டமாக தொடங்கிவைக்கும்.

வசதியான பொதுப் போக்குவரவு இணைப்புகளைக் கொண்டிருக்கும் குடியிருப்புப் பகுதிகள், பொழுதுபோக்கு இடங்களுடன் இணைக்கப்படும். மக்கள் தங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக நடக்கவும் சைக்கிள் ஓட்டவும் இது ஊக்குவிக்கும்.

மேற்கில் உள்ள புதிய பூங்காவையும் கிழக்கில் காத்திப் எம்ஆர்டி நிலையம் அருகே தற்போதுள்ள அக்கம்பக்க பூங்காவையும் இணைக்கும் நடைபாதை, குடியிருப்பின் மையப்பகுதியில் இருக்கும்.

சென்சாரு லிங்க் என்று அழைக்கப்படும் பேருந்துகள் மட்டும் செல்வதற்கான புதிய சாலை, குடியிருப்புப் பகுதியின் வடக்கிலிருந்து தெற்கு வரை அமையும் என்று வீவக கூறியது.

செம்பவாங் போன்ற அக்கம்பக்க வட்டாரங்களையும் காத்திப் போங்சு இயற்கைப் பூங்கா, லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கம் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களையும் தற்போது கட்டப்பட்டுவரும் வடக்கு, தெற்கு விரைவுச்சாலையையும் இணைக்கும் நடைபாதைகள், சைக்கிளோட்டப் பாதைகள் அமையும்.

சென்சாருவில் முதல் பிடிஓ திட்டம், எண் 50 பா சூன் பா ரோட்டில் 100 ஆண்டுகளுக்குமேல் பழமையான பங்களா வீட்டின் அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று வீவக கூறியது.

புக்கிட் செம்பவாங் ரப்பர் நிறுவனத்தால் 1910களின் முற்பகுதியில் கட்டப்பட்ட தோட்ட வீடான இந்த இரண்டு மாடி பங்களா, புதிய குடியிருப்புப் பகுதிக்காக அதிகாரிகளால் பாதுகாக்கப்பட்டது.

பங்களா வீட்டைச் சுற்றி புதிய பூங்கா கட்டப்படும். அந்த பங்களா சமூகப் பயன்பாடுகளுக்காக புதிய வழியில் மீண்டும் பயன்படுத்தப்படும்.

பிடிஓ திட்டத்திற்குப் பக்கத்தில் அமையும் பூங்காவில் விளையாட்டு இடங்கள், உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி இடங்கள், திறந்த புல்வெளி, விளையாட்டுத் திடல்கள், சிகிச்சைத் தோட்டம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று வீவக கூறியது.

குடியிருப்பாளர்கள் இப்பகுதியின் வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்ள தோட்டங்களையும் கதைப் பலகைகளையும் கொண்ட ஒரு மரபுடைமைப் பாதை பூங்காவில் இருக்கும்.

குறிப்புச் சொற்கள்