குளிரூட்டப்பட்ட பெரிய அறை ஒன்றில் உறையவைக்கப்பட்ட கோழி இறைச்சி பல கொள்கலன்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கை, சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பு முயற்சிகளில் அடங்கும்.
13,500 சதுர அடிகள் கொண்ட இந்த அறை 90 மீட்டர் நீளமும் 10 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது. இதனுள் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழ் 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். இங்கு 20,500 அடுக்குகளை (pallets) வைக்க முடியும்.
உணவு விநியோக, தளவாட நிறுவனமான வைசிஎச் குரூப் குழுமம் இந்த அறையைக் கண்காணிக்கிறது. இது, சிங்கப்பூரில் உணவு சேர்த்துவைக்கப்படும் இடங்களில் ஒன்று.
உறையவைக்கப்பட்ட கோழி இறைச்சியைத் தவிர மற்ற உணவு வகைகளும் இதுபோன்ற பகுதிகளில் சேர்த்துவைக்கப்படுகின்றன. டின் உணவு, அரிசி போன்றவையும் வைக்கப்படுகின்றன.
சட்டப்படி அரிசி மட்டும்தான் கட்டாயமாக சேர்த்துவைக்கப்படவேண்டிய உணவு வகையாகும். அப்படியிருந்தும் அதையும் தாண்டி பல்வேறு உணவு வகைகளை சிங்கப்பூர் சேர்த்துவைத்து வருகிறது.
சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பு உத்தியில் உணவைச் சேர்த்துவைக்கும் முறை முக்கியத் தூண்களில் ஒன்றாக விளங்குகிறது. பலவகையான பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்வது. உள்ளூரில் தயாரிப்பது, உலகளவில் பல தரப்புகளுடன் பங்காளித்துவம் வைத்துக்கொள்வது ஆகியவையும் சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பு உத்தியில் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
பருவநிலை மாற்றம், கொள்ளைநோய்ப் பரவல், வட்டார அளவில் நாடுகளுக்கிடையிலான அரசியல் நிலவரம் ஆகியவற்றைக் கையாள உதவ உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது கூறினார். உணவு சேர்த்துவைக்கப்பட்டுள்ள, குளிரூட்டப்பட்ட இந்த அறைக்கு நேரில் சென்றபோது அவர் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த அறை அமைந்துள்ள இடம் தெரிவிக்கப்படவில்லை.
“இன்றையத் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் வருங்காலத்தில் எழக்கூடிய மிரட்டல்களையும் இடையூறுகளையம் கருத்தில்கொண்டும் எங்கள் உணவு சேர்த்துவைப்பு உத்தி உருமாற்றம் கண்டுள்ளது,” என்று அவர் விவரித்தார்.

