பெய்ஜிங்: மெட்டா நிறுவனம் சிங்கப்பூரில் இயங்கும், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மானுஸ் (Manus) நிறுவனத்தை வாங்கியது; ஆனால் அந்த 2.5 மில்லியன் வெள்ளிப் பரிவர்த்தனையை சீனா முடக்கியது.
அந்தப் பரிவர்த்தனையை ரத்து செய்யுமாறு சீனாவின் தேசிய வளர்ச்சி, சீர்திருத்தப் பிரிவு கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 27) அறிக்கை மூலம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நிறுவிய சென் டியென்சியாவ், தனக்குக்கீழ் உள்ள சீன, அமெரிக்க நிறுவனங்களுக்கிடையே ‘தடை’களை எழுப்பியுள்ளார். இந்நடவடிக்கையை எடுப்பது வருத்தம் தருவதாகக் கூறும் திரு சென், நாடுகளுக்கிடையிலான அரசியல் நிலவரத்தைச் சமாளிக்க இது அவசியமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
திரு சென், மிரோமைண்ட் (MiroMind) எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். இவர், சீனாவின் இணையச் சூதாட்டத் துறையில் முன்னோடியாக விளங்குபவர்.
இப்போது அந்நிறுவனத்தில், எல்லைதாண்டிய தகவல் பகிர்வு போன்ற செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதேவேளை ஊழியர்கள், தரவுகள் அதிகம் இடம் மாறாமலும் பார்த்துக்கொள்ளப்படும்.
திரு சென், மிரோமைண்ட்டில் 100 மில்லியன் டாலர் (127.69 மில்லியன் வெள்ளி) முதலீடு செய்துள்ளார். அத்தொகை, தனது நிறுவனக் குழுமமான ஷண்டா குழுமம், ‘டிஸ்கவரபல் ஏஐ’ என்றழைக்கப்படும் ஒருவகை செயற்கை நுண்ணறிவுக்காக ஒதுக்கியுள்ள இரண்டு பில்லியன் டாலரில் அங்கம் வகிக்கிறது.
மிரோமைண்ட்டில் 60க்கு அதிகமாக விஞ்ஞானிகள் வேலை செய்கின்றனர். அவர்கள் சிங்கப்பூர், தோக்கியோ, சியேட்டல் போன்ற இடங்களைச் சேர்ந்தவர்கள்.
சீனாவின் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் அனுமதியின்றி அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வது தடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் சீன அதிகாரிகள் தன்னைத் தொடர்புகொண்டதாகவும் ஒரு தரப்பின் அனுமதியுடன் மட்டும் மற்ற நாடுகளுக்குத் தொழில்நுட்பத்தை இடம் மாற்றுவதன் தொடர்பில் தம்மை எச்சரித்ததாகவும் தெரிவித்தார். ‘ஃபையர்வால்’ எனப்படும் இணையப் பாதுகாப்புச் சுவர்களை எழுப்பப்போவதாகக் கூறிய பிறகுதான் பிரச்சினை தீர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“மனித குலத்தின் எதிர்காலத்துக்காக சீன, உலகத் திறனாளர்களை ஒன்றிணைக்கலாம் என்று நான் நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால், மானுஸ் சம்பவத்துக்குப் பிறகு ஃபையர்வால்களை முழுமையாகச் செயல்படுத்த வேண்டியிருந்தது,” என்று திரு சென் சென்ற வாரம் மெய்நிகரில் நடந்த நேர்காணலில் பேசினார்.

