சீன மின்சார வாகன நிறுவனமான ‘ஸ்கைவொர்த்’ சிங்கப்பூரில் தனது விற்பனையைத் தொடங்கியுள்ளது.
உபியில் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 7) அது தனது விற்பனை நிலையத்தைத் திறந்தது. 20, உபி ரோடு 4 எனும் முகவரியில் 2,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள அந்நிலையத்தில் அதிகபட்சமாக நான்கு வாகனங்களைக் காட்சிப்படுத்த முடியும்.
ஸ்கைவொர்த் வாகனங்களுக்கான பழுதுபார்ப்பு, பராமரிப்புப் பணிமனையும் அந்த வளாகத்தினுள்ளேயே அமைந்துள்ளது.
‘K’ என்பதே ஸகைவொர்த் நிறுவனம் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தியுள்ள முதலாம் வகை மின்சார கார். 150 கிலோவாட் திறன் கொண்ட ஒற்றை இயந்திரத்தையும் மணிக்கு 86 கிலோவாட் மின்கலத்தையும் அது கொண்டுள்ளது.
ஒருமுறை மின்னூட்டம் செய்தால் அந்த கார் 489 கிலோமீட்டர்வரை செல்ல முடியும் எனக் கூறப்பட்டது.
‘பி’ பிரிவு வாகன உரிமைச் சான்றிதழுடன் கூடிய அவ்வாகனத்தின் விலை, கழிவுகளுக்குப் பின் $183,888 எனத் தெரிவிக்கப்பட்டது.
ஸ்கைவொர்த் நிறுவன கார்களுக்கான சிங்கப்பூர் முகவராக அல்பைன் குழுமம் நியமிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவு வாகன உரிமைச் சான்றிதழுக்குத் தகுதிபெறும் வகையில், குறைந்த திறன் கொண்ட ‘K’ வகை காரை அறிமுகப்படுத்தத் திட்டமில்லை என்று அல்பைன் குழுமத்தின் இயக்குநர் கீத் பாங் கூறினார்.