ஒன் நார்த் வட்டாரத்திலுள்ள கூட்டுரிமை வீடுகளுக்கான கட்டுமானத் தளத்தில் சீனாவின் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.
ஜூலை 21ல் அந்தக் கொடி பறக்கவிடப்பட்டதை ‘ஸ்டோம்ப்’ செய்தித்தள வாசகர் ஒருவர் படம் எடுத்தார்.
‘புளூம்ப்ஸ்பரி ரெசிடன்சஸ்’ கட்டுமானத்தளத்தின் இரண்டாவது நுழைவாயிலுக்கு அருகில் இணைக்கப்பட்ட கழி ஒன்றிலிருந்து சீனக் கொடி பறக்கவிடப்பட்டதை அந்தப் படங்கள் காட்டின. நுழைவாயிலின் மறுமுனையில் சிங்கப்பூர்க் கொடி அதே விதமாகப் பறக்கவிடப்பட்டிருந்தது.
சிங்கப்பூரின் தேசிய தின காலகட்டத்தில் பிற நாடுகளின் கொடியைப் பொதுவெளியில் பறக்கவிடுவது தவறு எனக் கருதுவதாகப் படங்களை எடுத்த ஸ்டோம்ப் வாசகர், அந்தச் செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் அரசமைப்புச் சட்டத்தின்படி, பொது இடத்தில் சிங்கப்பூர் அல்லாத எந்த நாட்டின் கொடியையும் சின்னத்தையும் காட்சிக்கு வைப்பது குற்றமாகும்.
அந்தக் குற்றத்தைப் புரிவோர் 500 வெள்ளி வரையிலான அபராதத்தையோ ஆறு மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையையோ எதிர்நோக்கலாம்.
புளூம்ப்ஸ்பரி ரெசிடன்சஸ் கட்டுமானப் பணிகளில் இணைந்துள்ள சிங்ஜியென் ரியல்ட்டி, ஃபொர்சியா ஹோல்டிங்ஸ் ஆகியவை சீனாவுடன் தொடர்புடையவை.