தற்காலிக அதிபர், வர்த்தகத் தலைவர்களைச் சந்தித்த சீனப் பிரதமர்

2 mins read
2d4050bf-c6b2-4d37-b802-a1fd30a6a55a
தற்காலிக அதிபர் எடி டியோவை (வலது) இஸ்தானாவில் சந்தித்துப் பேசிய சீனப் பிரதமர் லி சியாங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

தற்காலிக அதிபர் எடி டியோவைச் சீனப் பிரதமர் லி சியாங் ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 26) இஸ்தானாவில் சந்தித்துப் பேசினார்.

பிரதமர் லி சியாங் சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமையுடன் (அக்டோபர் 26) அவரது சிங்கப்பூர் பயணம் நிறைவடைந்தது.

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு நல்லுறவைத் தற்காலிக அதிபர் டியோவும் பிரதமர் லி சியாங்கும் மறுஉறுதி செய்துகொண்டனர்.

இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் நிலவும் சீரான, நீடித்த ஒத்துழைப்பை அவர்கள் இருவரும் வரவேற்றனர்.

இந்தத் தகவலை வெளியுறவு அமைச்சு வெளியிட்டது.

அதிபர் தர்மன் சண்முகரத்னம் விடுப்பில் உள்ளார். அவர் வெளிநாட்டுக்குச் சென்றுள்ள வேளையில் அதிபர் ஆலோசகர்கள் மன்றத் தலைவரான திரு டியோ, தற்காலிக அதிபராகச் செயல்பட்டு வருகிறார்.

வட்டார, அனைத்துலக மேம்பாடுகள் குறித்தும் திரு டியோவும் திரு லியும் கலந்துரையாடினர்.

இதற்கிடையே, அதே நாளன்று சிங்கப்பூர் - சீனா வர்த்தகக் கலந்துரையாடலில் திரு லி சியாங் கலந்துகொண்டார்.

இதில் இருநாடுகளின் வர்த்தகத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடல் துணைப் பிரதமர் கான் கிம் யோங் தலைமையில் நடைபெற்றது.

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் பலனளிக்கும், வளர்ந்து வரும் துறைகளில் இருநாடுகளைச் சேர்ந்த வர்த்தகங்களும் வாய்ப்புகளைத் தேடிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று திரு கான் ஊக்குவித்தார்.

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையில் அரசதந்திர உறவுகள் தொடங்கி 35 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இதை அனுசரிக்கும் வகையில் திரு லி சியாங்கின் சிங்கப்பூர் பயணம் அமைந்தது.

சீனப் பிரதமர் ஒருவர் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டது, கடந்த ஏழு ஆண்டுகளில் இதுவே முதல்முறை.

குறிப்புச் சொற்கள்