சீனப் பிரதமர் லி சியாங், சிங்கப்பூருக்கு அக்டோபர் 25 முதல் 26 வரை வருகையளிக்கிறார்.
பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பை ஏற்று அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
2018க்குப் பிறகு சீனப் பிரதமர் ஒருவர் சிங்கப்பூருக்கு வருவது இதுவே முதன்முறையாகும்.
இவ்வாண்டு ஜூன் மாதம் திரு வோங், சீனா சென்றிருந்தார். இந்த இரண்டு அதிகாரத்துவப் பயணங்களின் பரிமாற்றம், சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் அரசதந்திர உறவின் 35ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாடுவதாகச் சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
திரு லிக்குச் சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்ட பின்னர் அவர் பிரதமர் வோங்கைச் சந்திப்பார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் பசுமைத்துறை, மின்னிலக்கப் பொருளியல், திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுவதை அவ்விரு நாட்டுத் தலைவர்களும் பார்வையிடுவர்.
அக்டோபர் 26ல் திரு லி, தற்காலிக அதிபர் எடி டியோவைச் சந்திப்பார். அதிபர் தர்மன் சண்முகரத்னம் தற்போது வெளிநாட்டு விடுப்பில் உள்ளார்.
அத்துடன், சிங்கப்பூர்-சீனா வட்ட மேசையில் திரு லி, வர்த்தகத் தலைவர்களைச் சந்திப்பார். இந்த நிகழ்ச்சியைத் துணைப்பிரதமரும் வர்த்தகத் தொழில்துறை அமைச்சருமான கான் கிம் யோங் வழிநடத்துவார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த இரு நாள் பயணத்திற்குப் பிறகு திரு லி, கோலாலம்பூரில் நடைபெறவுள்ள ஆசியான் உச்சநிலைக்கூட்டத்தில் சீனாவின் சார்பில் பங்கேற்பார்.

