சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட சரக்குக் கப்பல், சீனக் கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) மற்றோரு கப்பலுடன் மோதியதாகச் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த வான் ஹாய் ஏ17 கப்பலும் சீனாவில் பதிவுசெய்யப்பட்ட ஹாய் லி 5 கப்பலும் குவாங்சோவில் அக்டோபர் 25ஆம் தேதி இரவு 8 மணியளவில் மோதிக்கொண்டது குறித்து ஒரு நாள் கழித்து தகவல் கிடைத்ததாக ஆணையம் குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட கப்பல் நிலையாக இருக்கிறது என்றும் அதில் உள்ள 23 ஊழியர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் வான் ஹாய் லைன்ஸ் குறிப்பிட்டது.
கப்பல்கள் மோதிக்கொண்டதில் கடலில் மாசு எதுவும் ஏற்படவில்லை.
எனினும், சீனாவில் பதிவுசெய்யப்பட்ட கப்பல் மூழ்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன. சீன அதிகாரிகள் தேடல், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சீனக் கப்பலில் இருந்த 15 ஊழியர்களில் இருவரைக் காணவில்லை என்று சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
வான் ஹாய் 17 கப்பல், சீன அதிகாரிகளின் விசாரணைக்கு உதவ துறைமுகத்தில் அணைந்திருந்தது.
சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் தேவையான உதவிகளைச் செய்ய வான் ஹாய் லைன்ஸுடனும் சீன அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சம்பவம் தொடர்பில் ஆணையமும் விசாரணை நடத்தவிருக்கிறது.

