ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்க வெளிநாட்டவரைப் பணியமர்த்தும் குடிமைத் தற்காப்புப் படை

1 mins read
430853c9-0e29-4ec7-8b6a-cd5e22facc4b
குடிமைத் தற்காப்புப் படையிடம் தற்போது செயல்பாட்டில் 95 அவசர மருத்துவ வாகனங்கள் உள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, அவசர அழைப்புகளை ஏற்க மருத்துவ உதவியாளர்களாகவும் அவசர மருத்துவத் தொழில்நுட்பர்களாகவும் வெளிநாட்டவர்களைப் பணியமர்த்தவுள்ளது.

மனிதவளப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் அதன் 24 மணிநேர அவசர மருத்துவச் சேவைகளை வலுப்படுத்தவும் இந்த ஏற்பாடு அமைகிறது. குடிமைத் தற்காப்புப் படையிடம் தற்போது செயல்பாட்டில் 95 அவசர மருத்துவ வாகனங்கள் உள்ளன.

சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படைந்து வருவதால், அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்திசெய்ய மருத்துவ வாகன எண்ணிக்கையை அதிகரிக்க அது திட்டம் கொண்டுள்ளது.

ஹோம்டீம்என்எஸ் காத்திப்பில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராகிம், மார்ச் மாதத்திலிருந்து வெளிநாட்டவர்களைப் பணியமர்த்த குடிமைத் தற்காப்புப் படையின் திட்டத்தை அறிவித்தார்.

அவர்களில் பெரும்பாலானோர் ஆசியான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றார் அவர். குடிமைத் தற்காப்புப் படையின் தரநிலைகளுக்கும் நடைமுறைகளுக்கும் ஏற்ப, வேலையில் சேர்வோருக்குக் கடுமையான பயிற்சி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு மருத்துவ உதவியாளர்களும் அவசர மருத்துவத் தொழில்நுட்பர்களும் ஆண்டுதோறும் தேர்வுகளில் தேர்ச்சியடைய வேண்டும் என்பதோடு, உள்ளூர் ஊழியர்கள் செல்லும் அதே பயிற்சித் திட்டங்களுக்கும் அவர்கள் செல்ல வேண்டும்.

குடிமைத் தற்காப்புப் படை பிப்ரவரி 13ல் வெளியிட்ட அதன் வருடாந்தரப் புள்ளிவிவரத்தில், 2024ல் 245,279 அவசர அழைப்புகளை ஏற்றதாகத் தெரிவித்தது. அவற்றில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டு அழைப்புகள், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் சம்பந்தப்பட்டவை.

குறிப்புச் சொற்கள்